
வன்னி இறுதிக்கட்டப் போரின்போது, விடுதலைப்புலி போராளிகள் சரணடைவதற்கு ஐக்கிய நாடுகள் சபை வழங்கிய உறுதி மொழிக்கு முரணாக அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை போன்ற பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இறுதிக்கட்டப் போரின்போது ஐ.நா.வின் சொந்த நடவடிக்கைகளை எவ்வாறு மீளாய்வு செய்வது என்பது தொடர்பாக தீர்மானிப்பதற்காக செயற்பட்டுக் கொண்டு இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
எனவே மீளாய்வுக்கான தன்மைகளை கண்டறிவதற்காக பல்வேறு முகவர் அமைப்புகளுடன் செயலகம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்தப் பணி ஆரம்பமாகியுள்ளது. ஆயினும் மீளாய்வு இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை என்று ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான நிபுணர் குழுவின் பரிந்துரைகளில் ஒன்றை தான் ஏற்றுக் கொண்டிருப்பதாக கடந்த ஏப்ரலில் ஐ.நா. செயலாளர் நாயகம்
பான் கீ மூன் தெரிவித்திருந்தார்.
இறுதிக் கட்டப் போரின்போது ஐ.நா.வின் சொந்த நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதே அந்த பரிந்துரைகளில் ஒன்றாகும் என்றார்.
இறுதிக்கட்டப் போரின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பினர் கிளிநொச்சியிலிருந்து வெளியேறியமை, இழப்புகளின் தொகையை வெளியிடாமை, சர்வதேசச் சட்டங்களுக்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் சரணடைய பான் கீ மூனின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார் வழங்கியதாக கூறப்படும் உறுதி,அதன் பின்னர் சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான பரிந்துரையையே பொதுச் செயலாளர் ஏற்றுக்கொண்டுள்ளார் என்று பர்ஹான் ஹக் குறிப்பிட்டார்.
இவை தொடர்பான செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment