
அனைத்துலக இராஜதந்திரிகள் மத்தியில் அலரிமாளிகையில் வைத்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட, 1800 முன்னாள் போராளிகளும் மீண்டும் வவுனியா தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வவுனியா தடுப்பு முகாம்களில் புனர்வாழ்வு பெற்ற 1800 முன்னாள் போராளிகளை சிறிலங்காஅதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் விடுதலை செய்திருந்தார்.
முன்னாள் போராளிகளை விடுவிக்கும் இந்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 30 முன்னாள் போராளிகள் மட்டுமே பெற்றோரிடம் கையளிக்கப்பட்டனர். அதற்கென 30 பெற்றோர் மட்டும் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் சிறிலங்கா அதிபரால் கையளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், வீடுகளுக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று அவர்களது பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட எவரையுமே பெற்றோர்களுடன் வீடுகளுக்குச் செல்வதற்கு சிறிலங்கா அரச அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. சிறிலங்கா இராணுவ அதிகாரிகளால் அவர்கள் மீண்டும் பேருந்துகளில் ஏற்றி வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதனால் பிள்ளைகளைப் பொறுப்பேற்ற கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த 30 பெற்றோர்களும் பெரும் ஏமாற்றத்துடன் தமது வீடுகளுக்குத் திரும்பிச் சென்றுள்ளனர்.
அதேவேளை, கொழும்பில் நடைபெற்றது ஒரு அதிகாரபூர்வ விடுவிப்பு நிகழ்வே என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும், புனர்வாழ்வு அமைச்சின் மூத்த ஆலோசகர் சதீஸ்குமார் பிபிசியிடம் கூறியுள்ளார்.
விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட அனைவரும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் புனர்வாழ்வு நிலையங்களில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு நிலையங்களில் பயற்சி பெற்றதற்கான ஆவணங்கள், மருத்துவ சான்றிதழ் போன்ற பல்வேறு சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டியிருப்பதாகவும், அடுத்த இரண்டு நாட்களில் இந்தச் சான்றிதழ்கள் அதிகாரிகளினால் தயார் செய்யப்பட்டு விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment