
கல்கிஸ்சை மாநகர சபையில் ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவுக்கு இன்று பகல் கொலை அச்சுறுத்தல் விடுத்தவர்கள் “உனக்கு வாக்களிப்பதை விட உனக்கு வாக்களிப்பதனை விட புலிகளுக்கு வாக்களிக்கலாம். நீ புலிகளை விட மிகவும் மோசமானவன்“ என்றும் திட்டித் தீர்ததுள்ளனர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த டெலோ இயக்க அரசியல் தலைவர் எம்.கே. சிவாஜிலிங்கம்,
ஜனநாயக தேசிய உரிமைக்காகக் குரல் கொடுத்து வரும் ஒருவர் இவ்வாறு கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளமை வருத்தத்தைத் தருகிறது. சிறுபான்மை மக்களுக்கும் தொழிலாளர் வர்க்கத்துக்குமாகக் குரல் கொடுத்து வரும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, தமிழர் சுயநிர்ணயம், தமிழர் சுயாட்சி என்பனவற்றை வெளிப்படையாக வலியுறுத்தி வருகிறார். இவ்வாறான ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதன் பின்னணியி்ல் உள்ளவா்கள் யார் என்பதனை நாம் இலகுவாக அடையாளம் காணக் கூடியதாகவும் உள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
(முன்னைய செய்தி)
தெகிவளை – கல்கிஸ்சை மாநகர சபையில் ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவுக்கு இன்று பகல் கொலை அச்சுறுத்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.கொம்பனித்தெருவில் அமைந்துள்ள அவரது கட்சிப் பணிமனையில் நடைபெறவிருந்த முக்கிய பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அத் தருணத்தின்போது கொழும்பு மாநகரசபைக்கு அருகாமையில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாத நபர்கள் இவருடைய வாகனத்தை மறித்ததோடு இவருக்கு மரண அச்சுறுத்தலையும் விடுத்துள்ளனர்.பொலிஸ்மா அதிபருக்கு கருணாரத்னவினால் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.விக்கிரமபாகு கருணாரத்ன தமிழ் மக்களுக்கு சிறிலங்கா அரசினால் இழைக்கப்பட்டு வரும் அநீதிகளுக்கு எதிராக தலைநகரில் இருந்து துணிச்சலுடன் குரல் கொடுத்துவரும் சிங்களத் தலைவராவார்.
இவரது இன்றைய பிரச்சாரக் கூட்டத்தில் சிவாஜிலிங்கமும் கலந்து கொள்ள இருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது


No comments:
Post a Comment