சீனா, ருஷ்யா, ருஷ்யா தலைமையிலான முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள், இந்தியா, பாக்கிஸ்தான், ஆகியவற்றை உள்ளடக்கிய ஷங்காய் கூட்டுறவு ஒப்பந்தம் (Shanghai Co-operation Agreement) என்ற இராணுவ, அரசியல் அமைப்பு உருவாகும் நிலையில் இருக்கிறது.
சிறி லங்கா ஒரு ‘உரையாடல் பங்காளியாக” (Dialogue Partner) இணைக்கப்படுவதற்குப் பேச்சுக்கள் நடக்கின்றன. ஷங்காய் கூட்டுறவு ஒப்பந்தம் நிறைவேறுமானால் உலகின் மிகப் பெரிய இராணுவ அரசியல் கூட்டமைப்பான நேற்ரோ இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுவிடும்.
வட அத்திலாந்திக் உடன்படிக்கை அமைப்பு (North Atlantic Treaty Organization) என்ற நேற்ரோ (Nato) 1949 ஏப்ரல் 4ம் நாள் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்ரனில் கைச்சாதிடப்பட்ட உடன்படிக்கை மூலம் உருவாக்கப்பட்டது. இதில் வட – அமெரிக்க மற்றும் மேற்கு ஜரோப்பிய நாடுகள் இணைந்தன.
இந்த உடன்படிக்கையின் பிரதான நோக்கமான கூட்டுப் பாதுகாப்பு (Collective Security) அதன் 5ம் சரத்தில் கூறப்படுகிறது. நேற்ரோ உறுப்பு நாடுகளில் ஒன்றையோ அதிலும் கூடியவற்றையோ அமெரிக்காவிலோ ஜரோப்பாவிலோ பிற நாடு அல்லது நாடுகள் தாக்கினால் உறுப்பு நாடுகள் அனைத்தும் இணைந்து பாதுகாப்பு வழங்கும் என்பது 5ம் சரத்தின் கருப் பொருள்.
2009 மார்ச் 10ம் நாள் நிலவரப்படி நேற்ரோ அமைப்பில் 28 நாடுகள் உறுப்புரிமை பெற்றுள்ளன. சோவியத் ஒன்றியம் 15 தனி நாடுகளாக உடைந்து 1991 டிசெம்பர் 26ம் நாளுடன் முடிவுற்ற பிறகும் நேற்ரோ தொடர்ந்து செயற்படுகிறது. கிழக்கு ஜரோப்பிய நாடுகளை நேற்ரோவில் இணைக்கமாட்டோம் என்று ருஷ்யாவுக்குக் கொடுத்த வாக்குறுதியையும் மீறித் தொடர்ச்சியாகக் கிழக்கு ஜரோப்பிய நாடுகள் நேற்ரோவில் இணைக்கப்பட்டன.
நேற்ரோவின் முதலாவது பொதுச் செயலாளரான ஹேஸ்ரிங்ஸ் இஸ்மே பிரபு (Baron Hastings Ismay) நேற்ரோவின் நோக்கத்தை மிகச் சுருக்கமாகச் சொன்னார். எமது இலக்கு ‘ருஷ்யர்களை வெளியேற்றி,அமெரிக்கர்களை உள்ளுக்கு இழுத்து, ஜேர்மனியர்களை அடக்குவது” என்று கூறினார்.
1950ல் கோரியத் தீபகற்பப் போர் தொடங்கிய பிறகு நேற்ரோ அமைப்பில் ஒரு பரபரப்பு காணப்பட்டது. கோரிய தீபகற்பப் போரில் முக்கிய தாக்குதல் நாடாக அமெரிக்கா ஈடுபட்டது இதற்குக் காரணம். நேற்ரோவின் முதலாவது பொதுச் செயலர் சொன்னதிற்கு மாறாக 1955 மே 9ம் நாள் மேற்கு ஜேர்மனி நேற்ரோவில் உறுப்பு நாடாக இணைக்கப்பட்டது.
இதன் நேரடி எதிரொலியாக சோவியத் ஒன்றியம் தனது தலைமையில் வார்சோ ஒப்பந்த அமைப்பை (Warsaw Pact) 1955 மே 14ம் நாள் உருவாக்கியது. போலாந்து தலைநகர் வார்சோவில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காரணத்தால் இந்தப் பெயர் பெற்றது. ஒப்பந்தத்தின் முழுப் பெயர் நட்பு, கூட்டறவு, பரஸ்பர உதவிக்கான உடன்படிக்கை (The Warsaw Treaty Organization of Friendsip Cooperation and Mutual Assisttance)
இந்த அமைப்பின் இராணுவ அரசியல் இலக்குகளைச் சோவியத் ஒன்றியம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. சோவியத் ஒன்றியத்தின் மீதான இராணுவத் தாக்குதலை முறியடிப்பது இந்த அமைப்பின் பிரதான நோக்கம். 1955 தொடக்கம் 1991 வரை நீடித்தபின் அது சோவியத் ஒன்றிய உடைவோடு இல்லாமற் போய்விட்டது.
வார்சோ ஒப்பந்த உறுப்பு நாடுகளான செக் குடியரசு, ஹங்கேரி, போலாந்து என்பன 1999 மார்ச் 12ம் நாள் நேற்ரோ உறுப்புரிமை பெற்றன. சோவியத் ஒன்றியத்தின் வாரிசு நாடான ருஷ்யா எஞ்சிய முன்னாள் சோவியத் ஒன்றிய உறுப்பு நாடுகளை இணைத்து சி.எஸ்.ரி.ஒ (C.S.T.O ) என்ற கூட்டுப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியது.
(C.S.T.O) வின் விரிப்பு பின்வருமாறு (Collective) இந்த அமைப்பு இன்று வரை இயங்குகிறது. ஷங்காய் கூட்டுறவு ஒப்பந்தம் நிறைவேறினால் சி.எஸ்.ரி.ஓ அதில் பங்காளி அமைப்பாக இடம்பெறும்.
நேற்ரோவும் வார்சோ ஒப்பந்த நாடுகளும் ஒரு போதும் நேரடி மோதல்களில் ஈடுபட்டதில்லை. இரு பக்கத்திலும் அணு ஆயுதங்கள் இருந்தபடியால் மோதலைத் தவிர்த்தன. ஆனால் இரு பக்கத்தினரும் தம்மைப் பலப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டனர். சோவியத் ஒன்றிய உடைவிற்குப் பிறகு போலாந்து வெளிப்படுத்திய கோப்புக்களில் மேற்கு ஐரோப்பா மீது அதிவேக அணு ஆயுதக் தாக்குதலை நடத்தும் சோவியத் ஒன்றியத் திட்டம் பற்றித் தெரியவந்தது.
1990 ஒக்ரோபர் 3ம் நாள் கிழக்கு ஜேர்மனியும் மேற்கு ஜேர்மனியும் ஒன்றிணைந்தன. அதனால் வார்சோ ஒப்பந்தத்தின் முக்கிய உறுப்பு நாடான கிழக்கு ஜேர்மனி நேற்ரோவுக்குள் வந்து விட்டது. பல்கேரியா, எஸ்தோனியா, லற்வியா, லிதுவேனியா, ரோமானியா, சுலோவேனியா என்பன 2004ம் ஆண்டிலும் அல்பேனியா 2009ம் ஆண்டிலும் நேற்ரோவில் இணைந்தன.
உலக நாடுகள் அனைத்தின் மொத்த இராணுவச் செலவினத்தில் 70 வீதத்தை நேற்ரோ உறுப்பு நாடுகள் செலவிடுகின்றன. மேலும். 2002 டிசெம்பர் 16ம் நாள் ஜரோப்பிய ஒன்றியமும் நெற்ரோவும் செய்த ஒப்பந்தத்தின் படி ஜரோப்பிய ஒன்றியம் தனித்து இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் போது நேற்ரோவுக்குச் சொந்தமான ஆயுத தளபாடங்களைப் பயன்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது.
நேற்ரோவின் பசுபிக் பிராந்தியத் தொடர்பு நாடுகளாக யப்பான், தென்கோரியா அவுஸ்திரேலியா, நீயூசிலாந்தும் மத்தியதரைக் கடற்பகுதித் தொடர்பு நாடுகளாக அல்ஜீரியா,எகிப்து, இஸ்ரேயில் மற்றும் ஜோர்தான் ஆகியனவும் இடம் பெறுகின்றன.நேற்ரோவின் தலைமைச் செயலகம் பெல்ஜியம் தலைநகர் பிறஷல்சில் காணப்படுகிறது. அது தோன்றிய 1949ம் ஆண்டு தொடக்கம் 1991 வரை பிற நாட்டுப் போர்களுக்கு ஆயுத தளபாட உதவிகளை வழங்கிக் கொண்டிருந்தாலும் தனது பெயரில் படை நடவடிக்கையில் ஈடுபட்டது கிடையாது.
சோவியத் ஒன்றிய உடைவைத் தொடர்ந்து யூகோசுலாவியா உடைவு ஏற்பட்ட பிறகு பொஸ்னியா – ஹேர்சிகோவினா பிரச்சனை தோன்றியது. இதில் 1991-1995 காலத்தில் நேற்ரோ நேரடித் தலையீட்டை மேற்கொண்டது. 1999ல் சேர்பியாவிலும் தலையிட்டது.
வரலாற்றில் முதன் முறையாக அதுஜரோப்பாவுக்கு வெளியே அப்கானிஸ்தானில் தனது பெயரில் இராணுவ நடிவடிக்கையை ஆகஸ்து 2003 தொடக்கம் இன்று வரை நடத்துகிறது. இது நேற்ரோவின் ஆசியப் பிரவேசமாக அடையாளம் காணப்படுகிறது. 2004 தொடக்கம் ஈராக் படைகளுக்குப் பயிற்சி வழங்கும் திட்டத்தை நேற்ரோ அமல்படுத்துகிறது.
2009 ஆகஸ்ட் 17ம் நாட் தொடக்கம் சோமாலியாக் கடற்கொள்ளையர்களுக்கு எதிராக நேற்ரோ போர்க் கப்பல்கள் ஏடன் வளைகுடாவிலும் இந்துமா கடலிலும் ஈடுபடுகின்றன. 2011 மார்ச் 17ம் நாள் ஜநா பாதுகாப்பு சபை நிறைவேற்றிய 1973 இலக்கத் தீர்மானத்திற்கு அமைவாக லிபியாவுக்கு எதிரான விமானக் குண்டு வீச்சை நேற்ரோ நாடுகள் நடத்துகின்றன.
நேற்ரோ உறுப்பு நாடுகளில் அமெரிக்கா, ஜக்கிய இராச்சியம், செக் குடியரசு, சுலோவாக்கியா என்பன ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் இலங்கை அரசிற்கு ஆயுதம் வழங்கின. நேற்ரோத் தொடர்பு நாடு இஸ்ரேயிலும் நட்பு நாடு இந்தியாவும் ஆயுதமும் ஆளணி உதவியும் வழங்கின.
நேற்ரோவின் முக்கிய உறுப்பு நாடான நோர்வே அமெரிக்காவின் கோரிக்கைக்கு இணங்கி புலிகளைப் பலவீனப் படுத்தும் இராசதந்திர நடவடிக்கையில் இறங்கியது. நோர்வே மத்தியஸ்தர் எறிக் சொல்கைம் ஜநா போர் குற்ற விசாரணைக்கு எதிரான கருத்தை வெளியிடுகிறார். தமிழர் பெருமளவில் வாழும் கனடாவும் நேற்ரோ உறுப்பு நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா தலைமை தாங்கும் நேற்ரோ இலங்கையில் கால் பதிக்க அர்த்தமுள்ள நகர்வுகளை மேற்கொள்கிறது. சீனாவும் ருஷ்யாவும் அமைக்கவிருக்கும் ஷங்காய் கூட்டமைப்பும் இதே நோக்கில் செயற்படுகிறது. ஆயுத வழங்கல் மாத்திரமல்ல போர்க் குற்ற விசாரணையைத் தடுக்கும் பாதுகாப்புச் சபை நடவடிக்கை மூலம் இரு நாடுகளும் இலங்கைக்கு உதவ முனைப்புக் காட்டுகின்றன.
உலகின் மிகப் பெரிய இராணுவக் கட்டமைப்பு என்று நேற்ரோ சொல்லப்பட்டாலும் ஷங்காய் ஒப்பந்த அமைப்பு நிறைவேறிச் செயற்படத் தொடங்கினால் அது உலகின் முழு மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்களை உள்ளடக்கியதாக இருக்கும். ஆயுத தளபாட ரீதியாகவும் வலுவுள்ளதாக இருக்கும்.
நேற்ரோவுக்கும் ஷங்காய் ஒப்பந்த நாடுகளுக்கும் இடையில் இந்துமா கடலாதிக்கப் போட்டி தீவிரமடையும் போது அதன் மூலம் இலாபம் அடையும் நிலையில் இலங்கை இருக்கிறது. முக்கியமாக இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணை ஓரங்கட்டப்படும் வாய்ப்புக்கள் நிறைய இருக்கின்றன.


No comments:
Post a Comment