பிரிட்டன் சனல் 4 தொலைக்காட்சியில் கடந்த மாதம் ஒளிபரப்பாகிய காணொளி அவுஸ்திரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சியில் நாளை திங்கட்கிழமை சிறிலங்காவின் கொலைக்களம் காண்பிக்கப்படவுள்ளதாக அத்தொலைக்காட்சி அறிவித்துள்ளது.நாளை 04.07.2011 திங்கட்கிழமை இரவு 8.30 மணிக்கு இக்காணொளி காண்பிக்கப்படவுள்ளது. இதனை மீண்டும் செவ்வாய்கிழமை இரவு 11.30 மணிக்கும் தொடர்ந்தும் ஏபிசி24 இல் சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கும் மீள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியை ஏபிசி தொலைக்காட்சியின் கெரி “ஓ“ பிரையன் தொகுத்து வழங்குகின்றார்.
நடந்துமுடிந்த போரில் எதுவித மக்களின் உயிரிழப்புக்களும் இடம்பெறவில்லை என சிறீலங்கா அரசு இப்போதும் தெரிவித்துவரும் நிலையில் இக்காணொளியை பார்ப்பதன் மூலம் நீங்களே அதுபற்றிய முடிவினை எடுங்கள் என அத்தொலைக்காட்சி வெளியிட்ட குறிப்பு தெரிவிக்கின்றது.
சிறீலங்காவில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அமெரிக்கா பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நியுசிலாந்து போன்றவை சுதந்திரமான விசாரணைக்குழுவை அமைக்குமாறு கோரிவரும் நிலையில் இதுவரை அவுஸ்திரேலியா அவ்வாறான கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சியில் வெளிவரும் இக்காணொளி முக்கியமானது என கருதப்படுகின்றது.
இக்காணொளியை அடுத்து எடுக்கப்பட இருக்கின்ற ஜனநாயக நடவடிக்கைகளிலும் உங்களின் பங்களிப்பு மிக அவசியம்.
இக்காணொளியை எதிர்க்கும் பலர் ஏபிசி தொலைகாட்சிக்கு தமது எதிர்கருத்துக்களை அனுப்பிவரும் நிலையில் தமிழ் மக்கள் தமது கருத்துக்களையும், உங்கள் மனவெளிப்பாடுகளையும், எமது நியாயங்களையும் அந்த ஊடகத்திற்கும் வெளிஉலகத்திற்கும் தெரியும் வகையில் பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இதேவேளை, ஆந்திர மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள கொண்டாப்பூரிலும் 'இலங்கையின் கொலைக்களம்" நேற்று (02-07-2011) திரையிடப்பட்டதாக, தமிழர்களைப் பாதுகாக்கும் அமைப்பு செய்திவெளியிட்டுள்ளது.


No comments:
Post a Comment