
சிறிலங்கா துடுப்பாட்ட அணி மீது 2009ல் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணகர்த்தாவாக விளங்கியவர் எனக் குற்றம் சாட்டப்பட்ட குறித்த நபர் விடுதலை செய்யப்பட்டு இரு நாட்களின் பின்னர், இதனுடன் தொடர்புபட்ட மேலும் மூன்று பேர் பாகிஸ்தானிய நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான லாகூரிலுள்ள பாகிஸ்தானிய நீதிமன்றானது, ஜாவைட் அன்வர், அப்துல் றெக்மான், முகமட் அப்துல்லா ஆகிய மூவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் நேற்றைய தினம் விடுதலை செய்துள்ளது.
ஏற்கனவே இந்த நீதிமன்றானது இப்பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட பிரதான குற்றவாளியான மலிக் இசாக் மற்றும் பிறிதொரு முக்கிய நபரான கிச்ராதுல்லா ஆகியோரை பிணையில் விடுதலை செய்திருந்தது.
சிறிலங்கா துடுப்பாட்ட அணியினர் மீதான இப்பயங்கரத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தற்போது நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ள மூன்று குற்றவாளிகளும் இத்தாக்குதலுடன் தாம் தொடர்புபட்டுள்ளனர் என தமது குற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் தற்போது சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானுக்கு சுற்றுப் பிரயாணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா துடுப்பாட்ட வீரர்கள், மார்ச் 03, 2009 அன்று பேரூந்து ஒன்றில் சென்று கொண்டிருந்த வேளையில் லாகூரிலுள்ள லிபேற்றி சௌவுக் என்ற இடத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உட்பட்டதுடன், இதில் பயணித்த சில துடுப்பாட்ட வீரர்கள் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment