
ஈழப்போர் சாரம்சத்தில் இந்தியாவுக்கு எதிராக சிங்களர் நடத்தும் போர்தான். இந்திய கொள்கை வகுப்பாளர்கள் இந்த வரலாற்று அம்சத்தை புரிந்துகொண்டு இனியாவது இலங்கை தொடர்பான அணுகுமுறையை மாற்றவேண்டும். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் இந்தியாவில் இருந்து வெளியாகும் 'இந்தியா டுடே' இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதன் விபரமாவது,
கேள்வி. தமிழ்நாட்டில் தற்போது மாறிக்கொண்டிருக்கும் ஈழ ஆதரவுச் சூழலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில். மிகவும் உற்சாகமூட்டுவதாக இருக்கின்றது. உண்மையான கவனத்தைச் செலுத்தக்கூடிய வலுவான தலைவர் ஒருவர் இருப்பதால்தான் இயல்பாகவே தமிழ்நாட்டில் மாற்றங்கள் நடக்கின்றன என நம்புகிறேன்.
முதல்வர் ஜெயலலிதான நிறைவேற்றிய தீர்மானங்கள், இவைபோன்ற தீர்மானங்களை மற்ற நாடுகளில் போடுவதற்கான வினையூக்கியாக திகழ்கின்றது.
முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் மனித இனத்தின் மனசாட்சியையே உலுக்கிவிட்டிருக்கின்றன. அது ஈழத்தமிழர்களை மட்டுமல்ல உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களை ஒன்று சேர்த்திருக்கின்றது.
இதில் தமிழ்நாடு தமிழர்கள் முக்கியமான இடத்தை வகிக்கிறார்கள். எட்டுக்கோடி தமிழர்கள் நினைத்தால் தமிழீழம் சாத்தியமாகும்.
கேள்வி. ஆனால் இந்தியாவுடனான உறவு குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில். இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் தெற்காசியாவிலும் இந்தியாவின் புவிசார் நலன்கள் குறித்து நாங்கள் புரிதலுடன்தான் இருக்கிறோம்.
இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை நாங்கள் அறிவோம். யார் நிஜமான நண்பர்கள் என்பதை இந்தியாக கருத்தில் கொள்ள வேண்டும். 1971 வங்கதேசப் போரின்போது பாகிஸ்தான் விமானங்களுக்கு கொழும்பு விமான நிலையம் திறந்துவிட்டதை நினைவூட்ட விரும்புகிறேன்.
வரலாற்று காரணங்களாலும் மகாவம்சம் ஊட்டிய அச்சத்தாலும் சிங்களர்கள் இந்தியாவை பகைமையோடு தான் பார்க்கிறார்கள். அவர்கள் ஈழத்தமிழர்களையே இந்தியாவின் கருவிகளாகப் பார்க்கிறார்கள்.
ஈழப்போர் சாரம்சத்தில் இந்தியாவுக்கு எதிராக சிங்களர் நடத்தும் போர்தான். இந்திய கொள்கை வகுப்பாளர்கள் இந்த வரலாற்று அம்சத்தை புரிந்து கொண்டு இனியாவது இலங்கை தொடர்பான அணுகுமுறையை மாற்றவேண்டும்.
இந்தியாவின் நலன்களும் ஈழத்தமிழர்களின் புவிசார் அரசியலும் ஒன்றுக்கொன்று முரண்பாடானது அல்ல என நாங்கள் நம்புகிறோம்.
கேள்வி. ஈழத்தில் அமைதியை கொண்டு வருவதற்காக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி எடுப்பீர்களா?
பதில். 1986,1990,1995, 2002-2006 என பல ஆண்டுகளாக இலங்கை அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் வீணாகப் போயின.
இலங்கை ஒரு சிங்கள பெளத்த நாடு என்ற நினைக்கும் அந்த அரசு அதை ஒன்றை இன ஒற்றை மத நாடாக ஆக்க இப்போது முயல்கிறது.
அதுமட்டுமல்ல முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் தற்போதைய வடிவத்தில் இலங்கை அரசோடு பேசுவது பயனற்றது என்பதைக் காட்டுவதோடு அப்படி செய்வது தார்மீகமும் அல்ல என்பதைக் காட்டுகின்றது.
ஈழத்தின் புவிசார் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை மனதில்கொண்டு நாங்கள் பிராந்திய மற்றும் சர்வதேச வல்லரசுகளோடு பேசுவதற்கான வழியைத் தான் பார்ப்போம்


No comments:
Post a Comment