கிளிநொச்சியில் ஆளுங்கட்சியினால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின் ஒரு அங்கமாக இடம்பெறவிருந்த இசைநிகழ்ச்சியில் தென்னிந்தியத் திரைப்படப் பாடகர்கள் கலந்து கொள்ளாமல் நிகழ்ச்சியைத் திடீரென இறுதி நேரத்தில் புறக்கணித்துள்ளனர்.இன்று கிளிநொச்சியில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் தனது கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கலந்து கொள்ளவிருந்தார். இந்த தேர்தல் பிரச்சாரத்தை மாபெரும் இசை நிகழ்ச்சியாக நடத்த திட்டமிட்ட ஆளுங்கட்சி தமிழகத்திலிருந்து பாடகர் மனோ, கிரிஷ் மற்றும் சுசித்ரா ஆகியோரைச் சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்திருந்தனர். அந்த அழைப்பை ஏற்று அவர்களும் இன்று கொழும்பு வந்திருந்தனர். ஆனால் தமிழக இசைக்கலைஞர்கள் ராஜபக்ஸவின் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள கூடாது என சீமான், நெடுமாறன் போன்றோர் மனோ, கிரிஷ், சுசித்ரா ஆகியோருக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். நிகழ்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும் என்றும் பாடகர் மனோவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் கொழும்பு விமான நிலையத்தில் இருந்த மூவரும் தமிழின உணர்வாளர்களின் கருத்துக்கு மதிப்பளித்து நிகழ்ச்சியை ரத்து செய்து தமிழகம் திரும்பவுள்ளனர்.
இது தொடர்பாக பாடகர் மனோ தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளிக்கையில் "கிளிநொச்சியில் ஒரு ஸ்டேடியம் திறப்பு விழா என்றே தாங்கள் அழைக்கப்பட்டிருந்ததாகவும் இந்த விழாவையே தேர்தல் பிரச்சாரமாகவும் செய்கிறார்கள் என்பது அங்கு வந்த பின்னர்தான் தெரிந்தது. தமிழ் ஆர்வலர்களும் பெரியவர்களும் கேட்டுக் கொண்டதாலும் நான் நிகழ்சியை ரத்து செய்து விட்டு தமிழகம் திரும்புகிறேன். எமது மக்கள் தமிழ் மக்களுக்கு ஒரு துன்பம் நேரும் போது அந்த நிகழ்வில் கலந்து கொள்ள நான் விரும்பவில்லை" என்று கூறியுள்ளார்.
தென்னிந்தியத் திரைப்படப் பாடகர்கள் மகிந்தரின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்தமை குறித்து தமிழ் மக்கள் பெரும் மனவேதனைக்கு உள்ளாகியிருந்தனர். இந் நிலையில் நிகழ்வைப் புறக்கணித்திருப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு ஆறுதலை வழங்கியுள்ளனர். அவர்களின் புறக்கணிப்பானது ஆளுங்கட்சிக்கு பலத்த அடியுடன் தமிழின உணர்வாளர்களுக்கு பெருவெற்றியையும் தந்திருப்பதாக அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


No comments:
Post a Comment