
உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் இசைநிகழ்ச்சி நடத்த இலங்கைக்கு அழைக்கப்பட்டிருந்த தென்னிந்திய பாடகர்களான மனோ, கிரிஷ், சுசித்ரா ஆகிய மூவரைக் கொண்ட குழு நிகழ்ச்சியை பகிஷ்கரித்து மீண்டும் தமிழகம் திரும்பியுள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்தை மாபெரும் இசை நிகழ்ச்சியாக நடத்த திட்டமிட்ட இலங்கை அரசு தென்னிந்தியப் பாடகர்களான மனோ, கிரிஷ், சுசித்ரா ஆகியோரை சிறப்பு அழைப்பாளராக மகிந்த ராஜபக்ஸ அழைத்திருந்தார்.
இலங்கை அரசின் அழைப்பை ஏற்று இந்த மூவர் கொண்ட குழு இன்று கொழும்பை வந்தடைந்தது. ஆனால் சீமான், நெடுமாறன் போன்றோர் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து, நிகழ்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும் இவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் கொழும்பு விமான நிலையத்தில் இருந்த மூவரும் நிகழ்ச்சியை ரத்து செய்து தமிழகம் திரும்புகிறார்கள். இது தொடர்பில் தொலைபேசி மூலம் பாடகர் மனோ தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது, ''கிளிநொச்சியில் ஒரு ஸ்டேடியம் திறப்பு விழா என்றே தங்களை அழைத்தார்கள்.
அங்கு சென்ற பின்தான் தெரிந்தது இந்த ஸ்டேடியம் திறப்பு விழாவில் ராஜபக்ஸவும் கலந்து கொள்கிறார். மேலும் இந்த விழாவையே அங்கு நடைபெறக்கூடிய தேர்தல் பிரச்சாரமாகவும் செய்கிறார்கள் என்பதே அங்கு வந்த பின்னர்தான் தெரிந்தது.
தமிழ் ஆர்வலர்களும் பெரியவர்களும் கேட்டுக் கொண்டதாலும் நான் நிகழ்சியை ரத்து செய்து விட்டு தமிழகம் திரும்புகிறேன். எமது மக்கள் தமிழ் மக்களுக்கு ஒரு துன்பம் நேரும் போது அந்த நிகழ்வில் கலந்து கொள்ள நான் விரும்பவில்லை' என்று அவர் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment