
மன்னார் தாழ்வுபாடு கீரி கடற்கரையில் கரையொதுங்கிய திமிங்கலத்தை சிறிலங்கா கடற்படையினரே கொன்றிருக்கலாம் என்று சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இறந்தநிலையில் கரையொதுங்கிய திமிங்கலத்தில் இருந்த ஆம்பர் எனப்படும் விலை உயர்ந்த பொருள் காணாமற் போயிருந்ததாலேயே இந்த சந்தேகம் எழுந்துள்ளது. திமிங்கலத்தில் உள்ள ஆம்பர் எனப்படும் பொருள் சுமார் 100 மில்லியன் ரூபா வரை பெறுமதியானது என்று திருகோணமலை பிராந்திய கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் அதிகாரி நீல் மொன்ரகே தெரிவித்துள்ளார்.
கரையொதுங்கிய திமிங்கலத்தின் உடலை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிய சிறிலங்கா கடற்படை அதை உடனடியாக எரித்து விட்டதால் இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சிறிலங்காவின் கடல் எல்லைக்குள் கண்டுபிடிக்கப்படும் அனைத்து வளங்களையும் கையாளும் அதிகாரம் கடற்றொழில் நீரியல்வளங்கள் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கே உள்ளது. ஆனால் அவர்களிடம் இருந்து அவசரமாக அந்த திமிங்கலத்தை பொறுப்பேற்ற சிறிலங்கா கடற்படையினர் அதை உடனடியாகவே எரித்து விட்டதாகவும் நீல் மொன்ரகே கூறியுள்ளார்.
ஆனால் அந்தத் திமிங்கலத்தினால் சுற்றாடலுக்கு மாசு ஏற்படும் ஆபத்து இருந்ததால் தான் அதை உடனடியாக எரித்ததாக சிறிலங்கா கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். கடற்படை மீதான குற்றச்சாட்டை அவர் நிராரித்த போதும், அந்தத் திமிங்கலத்தை ஆய்வு செய்ய தேசிய கடற்றொழில் ஆராய்ச்சி அபிவிருத்தி முகவரகம் விடுத்த வேண்டுகோளையும் சிறிலங்கா கடற்படை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment