
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வெற்றிக்களிப்புடன் மமதை மனோபாவத்தில் இருப்பதாகவும், நல்லிணக்கத்தில் இருந்து சிறிலங்கா வெகுதொலைவில் நிற்பதாவும் நெருக்கடிகளுக்கான அனைத்துலக குழு குற்றம்சாட்டியுள்ளது.
பிரசெல்சை தளமாகக் கொண்டியங்கும் நெருக்கடிகளுக்கான அனைத்துலக குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
சிறிலங்கா அரசின் மூர்க்கத்தனம் மற்றும் கருத்து மாறுபடுபவர்களை சகித்துக் கொள்ளாத தன்மை காரணமாக அங்கு மீண்டும் மோதல்கள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக இந்தக் குழு அச்சம் வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அரசு தமிழ்ப் புலிகளை இரண்டாண்டுகளுக்கு முன்னர் தோற்கடித்ததில் இருந்து, சிறுபான்மை தமிழர்களின் குறைகளை அங்கீகரிக்கவோ அல்லது தீர்க்கவோ தவறிவிட்டதாகவும் நெருக்கடிகளுக்கான அனைத்துலக குழு குற்றம்சாட்டியுள்ளது.
கடந்தகால முரண்பாடுகளால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதை விட, சிறிலங்கா அதன் கொள்கைகளை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நல்லிணக்க முயற்சிகளிலிருந்து தொலைவிலேயே தள்ளி வைத்திருப்பதாகவும் இந்த அமைப்பு கூறியுள்ளது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம், வெற்றிக்களிப்புடன் மமதை மனோபாவத்துடனேயே இருப்பதாகவும், சிறுபான்மை மக்கள் அவர்களின் எதிர்காலம் பற்றிய தீர்மானங்களின் போது ஒதுக்கப்படுவதாகவும், தேர்தல்களில் மோசடிகள் செய்து, குடியியல்சார் சிவில் சமுகத்தினர் வாய்கள் கட்டப்பட்டு மௌனிகளாக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வன்முறைகளிலும் மோசடிகளிலும் ஈடுபடும் தமிழ் துணைக் குழுக்களைப் பயன்படுத்தி, முன்னர் போர் நடந்த பிரதேசங்களில் அரசியல் நடவடிக்கைகள் நசுக்கப்பட்டு வருவதாகவும் இந்த அமைப்பு கூறியுள்ளது.
சிறிலங்காவில் நீண்டகாலம் நடந்த போரை, தனியே மோசமான பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று மட்டும் கருதாமல், அதனை அநீதி, அடக்குமுறைகளால் உருவான ஒரு பெரும் இனமுரண்பாட்டின் பகுதி என்று சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை, இந்த அறிக்கை ‘முட்டாள்தனமானது’ என்று சிறிலங்காவின் அரசாங்க தரப்பு நடாளுமன்ற உறுப்பினரும் அதிபர் மகிந்த ராஸஜபக்சவின் ஆலோசகருமான ராஜீவ விஜேசிங்க நிராகரித்துள்ளார்.
இது தொடர்பாக பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், அண்மைக்கால தேர்தல்கள் எல்லாம் நியாயமாக நடந்ததாகவும், பழைய ஏற்பாட்டு சித்தாந்தங்களுடன் பழிக்குப் பழி என்ற தோரணையில் நெருக்கடிகளுக்கான அனைத்துலக குழு செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment