
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் உள்ள நினைவுத்தூபி ஒன்று இடிக்கப்படுகின்றது. புத்தூர் வாதரவத்தை வீதியில் புத்தூர் தகரம்பிள்ளையார் ஆலயத்திற்கு வடக்கு பக்கத்தில் வீதியின் அருகே அமைந்துள்ள நினைவுத்தூபி ஒன்று கடந்த சில நாட்களாக இடிக்கப்பட்டுள்ளது.
இந்திய அமைதிப்படையினர் புத்தூர் கிழக்கு பகுதியில் மேற்கொண்ட படுகொலையில் 09 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். அம்மக்களின் நினைவாக இந்த நினைவுத்தூபி ஒன்று அப்பகுதி மக்களினால் அமைக்கப்பட்டிருந்தது. இத்தூபி கடந்த 2002ம் ஆண்டில் செம்மையாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அந்த மக்கள் தூபி இன்று இராணுவத்தினரால் இடிக்கப்பட்டு வருகின்றது. இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் கட்டிட நிர்மாண பணிகளுக்கு தேவையான கற்களை பெறுவதற்காக இத்தூபி இடிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். விடுதலைப் புலிகளின் சின்னங்கள் அழிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது பொதுமக்களின் நினைவுத்தூபிகளும் அழிக்கப்பட்டு வருவது வருத்தத்தையும் அதிர்ச்சியையும் தருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நடவடிக்கையினை உடனடியாக குறித்த தரப்பினர் கவனத்தில் எடுத்து நிறுத்தவேண்டும் என்றும் தூபியை மீண்டும் அழகுற அமைத்து தரவேண்டும் எனவும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.



No comments:
Post a Comment