டக்ளஸும், கருணாவும் அமைச்சர்கள் அல்லர். அவர்கள் சிங்களப் பேரினவாத அரசின் ஜனாதிபதி மஹிந்தராஜ பக்ஷவின் சேவகர்கள் எனக் குறிப்பிட்டார் ஐக்கிய சோசலிஸக் கட்சியின் செயலாளர் நாயகம் சிறிதுங்க ஜயசூரிய.நேற்றுமுன்தினம் யாழ். நகரில் பஸ்தியன் ஹோட்டலில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் ஐக்கிய சோசலிசக் கட்சி போட்டியிடுகிறது.
இந்தக் கட்சியின் வேட்பாளர்களான எஸ்.நகுலராசா, கா.சிவரஞ்சன், சி.கந்தசாமி சகிதம் பிரசன்ன மாகியிருந்த சிறிதுங்க ஜயசூரிய மேலும் தெரிவித்தவை வருமாறு:
யுத்தம் முடிந்த பின்னரும் வடபகுதி மக்கள் தேசிய சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் இழந்துள்ளனர். அதிகாரத்தைப் பகிர்ந்தளித்து தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசு தயாரில்லை.வட பகுதியில் இராணுவ ஆட்சியே இடம்பெறுகிறது. சகல விட யங்களிலும் இராணுவத் தலையீடுகள் அதிகரித்துள்ளன. இதே நிலைமைதான் தென்னிலங்கையிலும் படிப்படியாக வருகிறது.
வடக்கு மக்கள் திறந்த வெளிச்சிறைச் சாலையில் வாழ்வதனைப் போன்று இராணுவ அடக்குமுறையில் அகப்பட்டுள்ளனர். வன்னியில் இடம் பெற்ற இறுதி யுத்தம் தொடர் பான போர்க்குற்ற அறிக்கை மற்றும் சனல் 4 வீடியோ ஆகிய வற்றுக்குப் பதில் கூற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.அரசின் பக்கமே வடபகுதி மக்கள் என்பதைச் சர்வதேசத்துக்கு உணர்த்த முழு மூச்சில் அரசு பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளது. மக்கள் அவற்றை நம்பிவிடக்கூடாது என்றார்.


No comments:
Post a Comment