
வேலணை வங்களாவடிச் சந்தியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புச் சார்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த கலந்து கொண்டார். இன்று மாலை நடைபெற்ற மேற்படி பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அங்கு உரையாற்றுகையில்,
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலின் போது அரசுக்கு ஆதரவளித்ததன் மூலம் தீவக மக்களுக்கும் எமது அரசுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகவும் அந்த வகையில் அந்த மக்கள் எம்மோடு கைகோர்த்து நிற்பதாகவும் அது எமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
அந்த வகையில் பல அமைச்சர்கள் தற்போது யாழ் குடாநாட்டிற்கு வருகை தந்து மக்களது பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் அதற்குரிய வகையில் அந்த அமைச்சர்களும் இந்த மக்களுக்கான பல்வேறு உதவிகளையும் செய்யவுள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டில் நிலவிய யுத்தத்தால் எமது மக்கள் பல்வேறுபட்ட துன்ப துயரங்களுக்குள்ளான நிலையில் தற்போது யுத்தத்திற்கு முடிவு கட்டப்பட்டு ஓர் அமைதிச் சூழல் நிலவுகின்றது. இந்நிலையினைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமது மக்களையும் சார்ந்து நிற்கிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த நிலையில் எமது அரசுக்கு எதிராக அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பொய்ப் பிரசாரங்கள் குறித்து மக்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டுமென்பதுடன் இவ்வாறான பொய்ப் பிரசாரங்களுக்கு மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நாட்டில் இருக்கக் கூடிய அதிகளவிலான பிரதேச சபைகள் அரசிடமே உள்ளன என்றும் நாட்டை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி புரிந்து வருவதுடன்இதன் மூலம் நாட்டின் சகல பகுதிகளையும் அபிவிருத்தி செய்வதே எமது நோக்கமாகும்.
வடபகுதியில் பல்வேறு அபிவிருத்திகள் துரிதகதியில் இடம்பெற்று வருவதாகவும் இவ்வாறான அபிவிருத்திகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமெனவும் உங்கள் பிள்ளைகளின் கல்வி சுகாதாரம் முதற்கொண்டு குடிநீர் மின்சாரம் மற்றும் சுயதொழில் வாய்ப்புக்களை வழங்கியுள்ள நிலையில் தொடர்ந்தும் எமது அரசு இவற்றை வழங்கும் என்றும் வடக்கின் வசந்தம் ஊடாக உங்களது வாழ்வை முன்னேற்றும் விதமாக நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலின் போது புத்திசாலித்தனமாக வாக்களிக்குமாறும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்களான பவித்திரா வன்னியாராச்சி திஸ்ஸ கரலியத்தஇ சந்திரசேன குணரட்ன வீரக்கோன் ஆகியோருடன் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




No comments:
Post a Comment