தாயகம் முழுவதுமாக சிங்கள பேரினவாதத்தின் ஆளுகைக்குள் இருக்கும் ஒரு மந்தமான மௌனப்பொழுதில் இம்முறை கரும்புலிகள் தினம் யூலை 5ம் திகதி வருகின்றது.தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தின் அதிஉச்சமான போர் ஆயுதமாக கரும்புலிகள் எழுந்திருந்தார்கள். உலகவரலாற்றில் காணப்படும் அதி உயர்ந்த அர்ப்பணிப்புகளை செய்த மனிதர்களில் முதன்மையானவர்களாக கரும்புலிகள் என்றும் இருப்பார்கள். தேசியத்தலைவர் கரும்புலிகளின் உருவாக்கம்பற்றி சொன்னதைப்போலவே ‘பலவீனமான எமது இனத்தின் பலம்மிக்க ஆயுதம்’ என்பதே கரும்புலிகள் என்பதற்கான வரைவிலக்கணமாக எக்காலமும் இருக்கும்.
இதற்கு முன்னரே எல்லோரும் சொன்னதைப்போலவே கரும்புலிகள் பற்றி முழுமையாக எழுதவோ பேசவோ யாராலும் முடியாதிருக்கும். ஆனாலும் அவர்களை எழுதவோ பேசவோ மறுத்து தமிழர்களின் வரலாறு எழுதப்பட இனிமுடியாது. நீண்ட நாள் கணக்கான, மாதக்கணக்கான சமர்கள் செய்து முடிப்பவற்றை கரும்புலிகள் ஒரு நொடிக்குள் தங்களின் வெடி அதிர்வுடன் செய்திருக்கிறார்கள்.
பல நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வீரர்கள் இணைந்து செய்து முடிக்க வேண்டிய முன்னெடுப்பை கரும்புலி தனிஒரு மனிதனாக செய்துமுடித்திருப்பான். எந்த யுத்த வரையறையும் எத்தகைய போரியல் வியூகமும் கரும்புலிகளை அளவிட்டு இருக்கவில்லை. இந்தச் சின்னக் கவிதை அவர்களுக்கு சமர்ப்பணம்.
அக்கினிக்குஞ்சுகள்
ஆதிக்கப்பெரும் காடெரிக்க எழுந்த
அக்கினிக்குஞ்சுகளின் நாள் யூலை5.
தேச விடுதலைக்காக தேகமுழுதும்
வெடிகுண்டுகாவிய வீரக் கரும்புலிகளின்
நினைவு சுமந்த பொழுதுஅது.
கரும்புலிகள்!
காரிருளே எங்கும் நிறைந்த
இரவைக்கிழித்து
சோதிப்பெரு வெளிச்சம் காட்டிய
எங்களின் குட்டிச்சூரியன்கள்.
வெந்நீர் விரலில பட்டாலே
விதிமுடிந்தது போல கதறும்
நம்மில் இருந்து
வெடியதிர்வில் உடல்சிதறும்
நேரம் அறிந்தும் புன்னகை ஒன்றுடனேயே
உலாவந்த அதிசயப்பிறவிகள் இவர்கள்.
உயிர்பூவை ஒருகணத்தில் ஊதிவிட்டு
வெடியதிர்வை திசைகளெங்கும் பரவவிட்டு
உடல்சிதறப் போய்வெடிக்கும் உன்னதத்தின்
உன்னதங்கள் இவர்கள்.
போய்வெடிக்கும் நேரம் தெரிந்திருந்தும்
ஏதும் கலக்கமின்றி இலக்கை தேடிநடந்து
ஒரு சின்ன நொடிக்குள்ளாக
காற்றில் கலந்துவிட இவர்களால்
எப்படித்தான் முடிகிறதோ..?
எல்லோருக்குள்ளும் இல்லாத பெருநெருப்பு
எப்படியாய் இவர்களுக்குள் மட்டும்
மையம் கொள்கிறதோ...
சின்னத் தடிமன் காய்ச்சல் என்றாலே
இல்லாத மருந்தெல்லாம் தேடும் உலகில்
எல்லாம் உதறிவிட்டு போய்வெடிக்க
இவர்களுக்கு மட்டும் எப்படி முடிகிறது..?
தங்களையே தற்கொடைதந்த எங்கள்
பிள்ளைகளுக்காய் என்ன கைமாறு செய்தால்
நன்றிக்கடனை அடைக்கலாம் நாம்.
கைகுவித்து கும்பிடலாம்.
கவிதை வடிக்கலாம்.- நினைவுப்
பொழுதில் ஒன்றுகூடலாம்.
ஏதோ ஒரு மலரை எடுத்து அவர்
நினைவில் வைக்கலாம்.- ஆனால்
இவை மட்டும் போதுமா அவர்
நினைவை மீட்க..?
இன்னும் இருள்கலையாதிருக்கும்
எங்கள் தேசத்தின் விடுதலைக்காய்
ஏதேனும் செய்வதுதான்
இந்த அக்கினிக் குஞ்சுகளுக்கு
எம்மால் ஆன நன்றிகள் ஆகும்.


No comments:
Post a Comment