வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வது தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் பங்கேற்பதற்காக, தனது தம்பிக்காக வாக்களிப்பதைக் கூட விட்டு விட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று மாலை அவசர கதியில் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்;.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சொந்த ஊர் கலிங்கப்பட்டி. இம்முறை அவரது ம.தி.மு.க. சார்பில் அவரது தம்பி கலிங்கபட்டியில் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
இதுவரைகாலமும் பொது தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் வைகோ எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், அதையெல்லாம் புறம் தள்ளி தனது சொந்த ஊரில் ஓட்டு போட நேரில் செல்வது வழக்கம்.
அதனைப் போன்றே இம்முறையும் வைகோ, உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு நேற்று காலை கலிங்கப்பட்டி புறப்பட்டு சென்றார். இந்நிலையில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதாக அவருக்கு செய்தி கிடைத்தது.
முன்னதாக பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. மேலும் அது தொடர்பான வழக்கொன்றும் உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
ஆனால், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து நீக்கி, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த வெங்கட் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனு 19.10.2011-ம் திகதி (இன்று) விசாரணை நடைபெறும் என்று, நீதிபதி சிங்வி நீதிமன்றம் அறிவித்து இருந்தது. இவ்வழக்கு விடயம் தொடர்பாக ம.தி.மு.க. தலைவர் வைகோ, கடந்த செப்டம்பர் 28ம் தேதி வைகோ டெல்லி சென்று மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியைச் சந்தித்தார். இந்த வழக்கு குறித்து ஆலோசனையும் மேற்கொண்டார்.
நீதிபதி சிங்வி விடுமுறையில் செல்வதால், இவ்வழக்கு 19ம் தேதி எடுத்துக்கொள்வதற்கு வாய்ப்பு இல்லை என்றும், சில நாட்கள் கழித்து விசாரணைக்கு வரும் என்றும், கடந்த 17.10.2011 அன்று டெல்லியில் இருந்து வைகோவுக்குத் தகவல் சொல்லப்பட்டது.
ஆயினும் நேற்றைய தினம் (18.10.2011) கலிங்கப்பட்டியில் இருந்த வைகோவுக்கு மாலை 4.30 மணி அளவில், இன்று (19.10.2011ம் திகதி) இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி டத்தோ, நீதிபதி சந்திரமௌலி அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக அவசரத் தகவல் கிடைத்தது.
அதையடுத்து உடனே, தொலைபேசி மூலம் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தமிழர்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியைத் தொடர்புகொண்டுள்ள வைகோ, 19.10.201ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள இந்த வழக்கில் அவசியம் நீங்கள் ஆஜராக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இந்த வழக்கில், மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியை பங்கேற்கச் செய்வதற்காக நேற்றைய தினம் (18.10.2011) தகவல் கிடைத்த உடனே, கலிங்கப்பட்டியில் இருந்து வைகோ புறப்பட்டு மதுரைக்கு வந்து மும்பை வழியாக விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தார்.
இதுவரை எந்தத் தேர்தலிலும் வைகோ வாக்கு அளிக்காமல் இருந்தது இல்லை. இன்று அவரது சொந்த கிராமத்தில், தனது தம்பிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டிய ஜனநாயகக் கடமை இருந்த போதிலும், அதற்கும் மூன்று தமிழர் உயிரைக் காக்கும் முயற்சி அதைவிட முக்கியமானது எனக் கருதி வைகோ டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளதாக அவரது கட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment