
லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் முவம்மர் கடாபி அவரது சொந்த ஊரான சிர்ற்றில் இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
லிபியாவின் தற்காலிக அரசின் தகவல்துறை அமைச்சர் முகமட் சம்ம்மான், தமது படையினர் கடாபியின் சடலத்தைக் கண்டதாக அறிவித்திருப்பதாக கூறியுள்ளார்.
லிபிய அரசின் மற்றொரு அதிகாரியும் கடாபி இறந்து விட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக கேணல் கடாபி உயிருடன் பிடிபட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அவரது இரண்டு கால்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், நோயாளர் காவு வண்டியில் அவரை ஏற்றிச் செல்வதாகவும் அதிகாரிகள் கூறியிருந்தனர்.
அதேவேளை கடாபி தனது சொந்த ஊரில் இருந்து தப்பியோட முனைந்த போது நேட்டோ விமானங்கள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த நிலையிலேயே புரட்சிப் படைகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.
முகத்திலும், கழுத்திலும் இரத்தம் வழிந்த நிலையில் கேணல் கடாபி தூக்கிச் செல்லப்படும், காட்சி கைத்தொலைபேசியில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் முதலில் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
அதேவேளை, கேணல் கடாபி தொடர்பாக குழப்பமான தகவல்களும் வெளியாகின்றன.
அவர் கொல்லப்பட்டுள்ள போதும் உயிருடன் சிக்கியே மரணமானாரா? கொல்லப்பட்ட பின்னர் அவரது சடலம் சிக்கியதா? எவ்வாறு அவர் மரணமானார் என்பன போன்ற கேள்விகளுக்கு இன்னமும் சரியான பதில்கள் கிடைக்கவில்லை.
கடாபி வீதி ஒன்றின் மதகினுள் ஒளிந்திருந்தபோதே, பிடிபட்டதாகவும், அவரைப் பிடித்த போது தன்னைச் சுட வேண்டாம் என்று கெஞ்சியதாகவும் புரட்சிப்படையைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.
கேணல் கடாபியிடம் இருந்து கைப்பற்றிய தங்கத்தில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றையும் அவர் காண்பித்துள்ளார்.
கொல்லப்பட்ட கடாபியின் உடலைச் சுற்றி புரட்சிப் படையினர் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடும் காணொலிக் காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன.
இராணுவப் புரட்சி மூலம் லிபியாவில் ஆட்சியைக் கைப்பற்றிய கேணல் கடாபி 42 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வந்தார்.
சில மாதங்களுக்கு முன்னர் புரட்சியாளர்களிடம் ஆட்சியை இழந்த கேணல் கடாபிக்கு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அண்மையில் பிடியாணை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






No comments:
Post a Comment