
இலங்கையில் நடந்து முடிந்த இறுதிப் போரின் கடைசிக் கட்டத்தில் அரச படையினர் பொதுமக்கள் மீது குண்டுகளையும் எறிகணைகளையும் வீசிக் கொடூரங்கள் புரிந்துள்ளார்கள் என்று குற்றஞ்சாட்டப்படும் அறிக்கை ஒன்று அவுஸ்திரேலிய பொலிஸாருக்குக் கிடைத்துள்ளது.நேற்று முதல் குறித்த அறிக்கை தொடர்பில் ஆராயத் தொடங்கி இருக்கின்றனர்.
இந்த அறிக்கையை சர்வதேச சட்டவல்லுநர்களின் அவுஸ்திரேலியக் கிளை தயாரித்துள்ளது. தற்போழுது அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் இலங்கையர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட வாக்குமூலங்களைக் கொண்டதாக இந்த அறிக்கை காணப்படுகின்றது. அதில் பலர் இலங்கை அரச படையினரால் தாங்கள் தாக்கப்பட்டனர் என்று வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சர்வதேச சட்டவல்லுநர்களின் அவுஸ்திரேலியக் கிளையின் தலைவர் ஜோன் தவுத் அறிக்கையில் காணப்படும் விடயங்கள் குறித்துக் கூறியதாவது:
சம்பவங்களை நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. பொதுமக்கள் மீது குண்டுகள் வீசப்படுவது, குறிப்பாக, அரசு அறிவித்த பாதுகாப்பு வலயங்கள் மீது எறிகணைகள் வீசப்படுவது மற்றும் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட முழு அளவிலான தொடர் தாக்குதல்கள் பற்றிய விவரம் இதில் அடங்கியுள்ளது. இது முற்றுமுழுதாக இலங்கை அரசு தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு மாறானதாகும்.
இலங்கை அதிகாரிகளின் அபத்தமான கதை
ஆரம்பத்தில், மோதலின் இறுதித் தினங்களில் பொதுமக்கள் எவருமே கொல்லப்படவில்லை என்று இலங்கை அதிகாரிகள் கூறி வந்துள்ளனர். இது முற்றிலும் அபத்தமான கதை என்றார் ஜோன் தவுத். இந்தத் தகவல்கள் அனைத்தும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சஞ்சிகை ஒன்றுக்காக முதலில் சேகரிக்கப்பட்டன. ஆனால் இவை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதால் அவுஸ்திரேலியப் பொலிஸாரிடம் அவற்றைச் சமர்ப்பிப்பதற்கு எமது நிறுவனம் முடிவு செய்தது என்றார் தவுத்.
இந்த மாதிரியான விடயங்களை விசாரிக்கும் அதிகாரம் அவுஸ்திரேலியப் பொலிஸாருக்கு உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
அவுஸ்திரேலியவுக்கு வெளியில் ஒரு பொது அதிகாரியால், அதிகார வகையில் செயல்படும் ஒரு நபரால் அல்லது அப்படியான ஒரு நபரால் தூண்டப்பட்டு செயல்படுபவரால் மனித குலத்துக்கு எதிரான கொடுமைகள் நிகழ்த்தப்படுமானால் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி விசாரிக்க அவுஸ்திரேலியாவால் முடியும் என்றார்.
அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் கெவின் ரூட்டுக்கும் இந்த அறிக்கையின் பிரதி கிடைத்துள்ளது.
அவரது பேச்சாளர் கூறுகையில்,
போர்க் குற்றங்களை அவுஸ்திரேலியா மிகவும் பாரதூரமாக எடுத்துக் கொண்டு விசாரணைகளை நடத்தும் என்றார்.
ஐ.நா. மனித உரிமை சபை மீண்டும் ஆராய வேண்டும் இலங்கையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நடத்திவரும் விசாரணையின் அறிக்கை நவம்பரில் வெளிவர இருக்கின்றது. அதனை மிகவும் நுணுக்கமாக அவுஸ்திரேலியா ஆராயும். மேற்கொண்டு வேறு நடவடிக்கைகள் தேவைப்படுமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று கூறிய அவர், இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபை மீண்டும் ஆராய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


No comments:
Post a Comment