இது தொடர்பாக குறிப்பாக மூவர் தொடர்பாக உடனடி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அவுஸ்திரேலியாவின் நீதித்துறை ஆணைக்குழு தனது அறிக்கையில் வலியுறுத்திக் கூறியுள்ளது. இவ்வாறு The Australian இணையத்தளத்தில் Gordon Weiss* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.
சிறிலங்காவின் உள்நாட்டுப் போரானது நிறைவுக்கு வந்து இரு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதில் பங்கு கொண்ட இரு தரப்பினரும் பொதுமக்களுக்கு எதிரான தீவிர போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக புதிய சாட்சியம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் 25 ஆண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது 2009ல் நிறைவுக்கு வந்தது. சிறிலங்காப் படைகள் தமிழ்ப் புலிகள் மீது மேற்கொண்ட இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பல பத்தாயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அத்துடன் பெண்கள், சிறுவர்கள், முதியோர் எனப் பலதரப்பட்ட மக்களை புலிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர். இதேவேளை சிறிலங்கா அரச படைகள் மேற்கொண்ட தாக்குதல்களில் பல ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பான சில சாட்சியங்களை கடந்த வாரம் அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் அந்நாட்டின் அனைத்துலக நீதித்துறை ஆணைக்குழு [the International Commission of Jurists - Australia] கையளித்தது.
சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது தமது குடும்பங்கள் மற்றும் நண்பர்களை இழந்த சில தமிழ் மக்களின் நேரடிச் சாட்சியங்கள் உள்ளடங்கலாக தம்மிடம் கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் சுருக்கக் குறிப்பை நீதித்துறை ஆணைக்குழு, அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் கையளித்துள்ளது. இதில் சில சாட்சியங்களை வழங்கியவர்கள் அவுஸ்திரேலியர்கள் அல்லது அவுஸ்திரேலிய நாட்டில் வதிபவர்களாவர்.
சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் போது கொல்லப்பட்ட பொதுமக்களுடன் தொடர்புபட்ட சம்பவங்களை கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ள அறிக்கையையே தற்போது அவுஸ்திரேலிய சட்டவாளர்கள் வழங்கியுள்ளனர்.
இதில் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள், ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்குள் மக்களைச் செல்லுமாறு அறிவித்துவிட்டு அங்கிருந்த பொதுமக்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதல்கள், கொத்துக் குண்டுகள் மற்றம் பொஸ்பரஸ் குண்டுகளைக் கொண்டு பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியமை, படுகொலைகள், சித்திரவதைகள், காணமற்போனவர்கள், உணவு மற்றும் மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டமை போன்ற பல சம்பவங்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் விசாரணைக்கான பொதுநலவாய இயக்குனர், அவுஸ்திரேலிய தேசிய காவற்துறை ஆகியவற்றிடம் இது தொடர்பாக குறிப்பாக மூவர் தொடர்பாக உடனடி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அவுஸ்திரேலியாவின் நீதித்துறை ஆணைக்குழு தனது அறிக்கையில் வலியுறுத்திக் கூறியுள்ளது.
முதலாவதாக அவுஸ்திரேலியாவிற்கான சிறிலங்காவின் தூதரகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திசார சமரசிங்கவை விசாரணை செய்யுமாறு அதில் கேட்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் அரசாங்கத்தால் 'யுத்த வலயமற்ற' பகுதிகள் என அறிவுப்புச் செய்யப்பட்ட இடங்களில் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் மீது அப்போது கடற்படை அதிகாரியாகவிருந்த திசார சமரசிங்கவின் கப்பல்கள் தாக்குதல்களை மேற்கொண்டன.
இது போன்றதொரு போர்க்குற்றச்சாட்டானது ஜேர்மனியின் தூதராக நியமிக்கப்பட்டிருந்த சிறிலங்கா இராணுவ அதிகாரி மீது சுமத்தப்பட்டு அவர் உடனடியாக பதவி விலக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இரண்டாவதாக அவுஸ்திரேலிய மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளினதும் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள பாலித கோகன்னவை விசாரிக்குமாறு அவுஸ்திரேலிய சட்டவாளர்கள், தமது நாட்டு அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கோரியுள்ளனர்.
பாலித கோகன்ன முன்னர் அவுஸ்திரேலியாவிற்கான சிறிலங்காவின் வெளிநாட்டுத் தூதராகவும், தற்போது நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவிற்கான சிறிலங்காத் தூதராகவும் கடமையாற்றுகின்றார். இறுதிப் போரின் போது படையினரிடம் சரணடைந்த ஒரு தொகுதியினரை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்வதற்கு பாலித கோகன்ன பொறுப்பாக இருந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான கொலைகள் இடம்பெறுவதற்கு தான் எவ்விதத்திலும் தலைமை தாங்கியிருக்கவில்லை என தன் மீது சுமத்தப்பட்ட இக்குற்றச்சாட்டை பாலித கோகன்ன மறுத்துவருகிறார்.
மூன்றாவதாக விசாரணை செய்யப்பட வேண்டியவர் சிறிலங்காவின் பிரபலம் மிக்க அதிபரான மகிந்த ராஜபக்ச எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முப்படைகளின் தளபதி என்ற வகையில் சிறிலங்கா அதிபர் தனது படை அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் மேற்கொண்ட போர்க் குற்றங்களுக்கான அனைத்துப் பொறுப்புக்களையும் ஏற்கவேண்டியவராவார்.
இன்னும் பதினைந்து நாட்களில் அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய உறுப்பு நாடுகுளின் தலைவர்களைச் சந்திக்கும் அதேவேளையில், எலிசபெத் இராணியாரையும் சந்திக்கவுள்ளார்.
தமிழ்ப் புலிகளின் தலைமை மீதும் போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள போதிலும் 2009ல் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழ்த் தலைமை முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. இப்போரில் வெற்றியீட்டிய சிறிலங்கா இராணுவப் படைகள் போர்க் குற்றங்களில் ஈடுபட்டுள்ளன. இவர்கள் தொடர்பான யுத்த மீறல்களை விசாரணை செய்யும் பொருட்டு சிறிலங்கா அரசாங்கம் ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளது.
யுத்த காலப்பகுதியில் சிறிலங்கா அரசாங்கம் தன்னால் முற்றுகையிடப்பட்ட பிரதேசங்களைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது. எந்தவொரு வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் இப்பிரதேசங்களில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பது தொடர்பாக முழுமையான அறிக்கைகளை வெளியிட முடியவில்லை.
பொஸ்னியாவின் படுகொலைக் களங்கள் போலல்லாது, சிறிலங்காவின் யுத்த வலயம் தொடர்பாக சுதந்திரமான, சுயாதீன சாட்சியங்களைப் பெற்றுக் கொள்ளமுடியவில்லை.
யுத்த வலயத்தில் அகப்பட்டுக் கொண்ட மக்களிடம் பெற்றுக் கொள்கின்ற சாட்சியங்கள் உண்மையில் அங்கு என்ன நடந்ததென்பதைத் தெரியப்படுத்துவனவாகவும், மிகச் சிறந்த சாட்சியங்களாகவும் அமைந்திருக்கும். ஆணைக்குழு போன்ற குழுக்களுடன் தற்போது அவர்கள் கதைக்க ஆரம்பித்துள்ளனர்.
சிறிலங்கா அரசாங்கம் தனது உள்நாட்டுப் பிரச்சினையைத் தானே தீர்த்துக் கொள்வதாக தெரிவித்த போதும் அது தனது வாக்குறுதியை இன்னமும் நிறைவேற்றாமையால் அனைத்துலக சமூகம் தனது பொறுமையை இழந்துவருகின்றது.
நன்னடத்தை தொடர்பான விடயங்கள் ஒருபுறமிருக்க, அனைத்துலக சமூகத்தின் சட்டங்கள், உடன்படிக்கைகள் மதிக்கப்பட வேண்டும் என இந்த உலகமானது எதிர்பார்த்து நிற்கின்றது.
உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வந்ததிலிருந்து, சிறிலங்கா அரசாங்கமாளது தன் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை ஏற்க மறுத்துள்ளதுடன், அதற்கான சரியான பதிலளிப்பதிலும் தாமதத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஒரு பொதுமகன் இறந்ததற்குக் கூடத் தமது படைவீரர்கள் பொறுப்பல்ல என சிறிலங்காவின் வெளிநாட்டுத் தூதர்கள் கடந்த சில ஆண்டுகளாகப் பதிலளித்து வருகின்றனர்.
யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சாட்சியங்கள் தற்போது அதிகரித்து வருவதால் இதற்கான பொறுப்பை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவேண்டும் என அழுத்தங்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத சில சந்தர்ப்பங்களில் ஒரு சில பொதுமக்களின் இழப்புக்கு தமது படைவீரர்கள் காரணமாக இருக்கலாம் என தற்போது சிறிலங்கா தரப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.
அவுஸ்திரேலியாவானது அதன் சொந்த நாட்டில் அமுலில் உள்ள சட்ட திட்டங்கள் மற்றும் அனைத்துலக சட்டக் கடப்பாடுகளுக்கு ஏற்ப சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளது.
சிறிலங்கா தன் மீது சுமத்தப்பட்டுள்ள பொது மக்கள் இழப்புத் தொடர்பாக திருப்திகரமான பதிலைத் தெரிவிக்காவிட்டால் அடுத்து சிறிலங்காவில் இடம்பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ள பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்குகொள்ளும் உச்சி மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்கின்ற கனேடியப் பிரதமர் ஸ்ரீபன் கார்ப்பரின் வெளிப்படையான கருத்தை யூலியா கிலார்ட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இம்மாநாடானது 2013ல் சிறிலங்கா அதிபர் ராஜபக்சவின் சொந்த இடமான அம்பாந்தோட்டையில் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
*Gordon Weiss, the UN spokesman in Sri Lanka during the war, is the author of The Cage: The Fight for Sri Lanka and the Last Days of the Tamil Tigers


No comments:
Post a Comment