தனித் தெலுங்கானாவுக்காக டிஆர்எஸ் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தும் ரயில் மறியல் போராட்டம் இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது. ஆந்திர மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் நடந்து வரும் இந்த ரயில் மறியல் போராட்டத்தினால் 136 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 60க்கும் மேற்பட்ட ரயில்கள் மாற்றுப் பாதையில் விடப்பட்டுள்ளன.
இன்று காலையில் மறியலில் ஈடுபட புறப்படும் முன்பாக காங்கிரஸ் எம்.பி., ராஜய்யாவை காசிபேட்டில் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் 7 காங்கிரஸ் எம்.பி.க்களை ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ளும் முன் போலீசார் கைது செய்துள்ளனர்.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவும் இதில் கைது செய்யப்பட்டார்.
அவரது மகளும் தெலுங்கானா ஜக்ருதியின் தலைவருமான கவிதா, மகனும் எம்எல்ஏவுமான தாரக ராமாராவ் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய தலைவரும் அக்கட்சியின் எம்பியுமான நடிகை விஜயசாந்தியும் இன்று கைது செய்யப்பட்டார். ஹைதராபாத் அருகே மௌலா அலி ரயில் பாதையில் மறியல் செய்த போது இந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மெஹபூப் நகரில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தெலுங்கானா மாவட்டங்கள் அனைத்திலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
போராட்டத்தைக் கைவிடாவிட்டால் அனைவரையும் ரயில்வே சட்டத்தின் கீழ் கைது செய்யப்போவதாக ஆந்திர போலீசார் அறிவித்துள்ளனர். இந்த சட்டப்படி கைது செய்யப்பட்டால், அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
பஸ் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போயுள்ள ஆந்திராவில் ரயில் போக்குவரத்துதான் ஓரளவு மக்களுக்கு கைகொடுத்து வந்தது. இப்போது ரயில்களும் ரத்தாகியுள்ளதால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.


No comments:
Post a Comment