அமெரிக்கா வெளியிட்டுள்ள இவ்வருடத்துக்கான மனித உரிமைமீறல் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.தத்தமது நாடுகளில் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீது மனித உரிமை மீறல் செயற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை உட்பட பதினான்கு நாடுகள் மனித உரிமை மீறல் நாடுகள் குறித்த அமெரிக்க அரசாங்கத்தின் இவ்வருடத்துக்கான பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடுகள் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா கடந்த புதன்கிழமை கோரிக்கை விடுத்துள்ளது.
சீனா, இலங்கை, ஈரான், லிபியா, வடகொரியா உட்பட 14 நாடுகளின் விபரங்களை வெளியிட்டுள்ள ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் எலின் சம்பலைன் டொனகோ இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குறிப்பிட்ட நாடுகள் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
உலகில் பெருமளவான நாடுகள் மனித உரிமைமீறல்களை மேற்கொண்டு வருகின்றன. ஆயினும் பஹ்ரைன், பெலாரஸ், கியூபா, மியான்மார், சூடான், சிரியா, வெனிசூலா, யெமன், சிம்பாப்வே,, சீனா, இலங்கை, ஈரான், லிபியா, வடகொரியா ஆகிய 14 நாடுகளும் ஏனைய நாடுகளை விட மிக மோசமான முறையில் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுவருவதாகவும் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment