
யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் இராணுவத்தினரிடமிருந்து சரணடைந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகளும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று இராணுவத்தின் யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
யாழ். இராணுவ சிவில் தொடர்பு அலுவலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே யாழ். கட்டளைத் தளபதி இதனைத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நிலவுகின்ற அமைதியான சூழலைக் குழப்புவதற்கான நடவடிக்கைகளில் தீய சக்திகள் செயற்பட்டு வருவதாகவும், அத்தகைய சக்தியினால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இராணுவத்தினரும், பொலிசாரும் வெவ்வேறாக விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வருகின்ற தீய சக்திகளில் இராணுவத்தினரோ அல்லது வெளியாட்களோ இருக்கலாம்.
சிலவேளைகளில் இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் விடுதலையாகியுள்ள முன்னாள் விடுதலைப்புலிகளும் இருக்கலாம் என்றும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் இராணுவத்தினர் சம்பந்தப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்கள் இராணுவத்தில் இருந்து விலக்கப்படுவார்கள் எனவும் மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க செய்தியளார்களிடம் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment