பி.பி.சி வானொலியும் தொலைக்காட்சியும் உலகத்து மக்களின் விருப்பத்திற்குரிய ஊடகங்களாக கணிக்கப்பட்டு வந்தாலும், அண்மைக்காலமாக இங்கிலாந்தின் சனல் 4 தொலைக்காட்சிச் சேவைதான் உலக மக்களைக் கவர்ந்த ஒளி சார்ந்த ஊடகமாக கணிக்கப்படுகின்றது.
அதற்கு அப்பால் உலகத் தமிழர்களின் உள்ளங்களில் நன்கு பதிந்து போன ஊடகமாகவும் இந்த சனல் 4 மதிக்கப்படுகின்றது. அதற்கு காரணங்கள் பல, ஒன்றல்ல.
2009ம் ஆண்டு மே மாதத்தின் இறுதிவரையிலும் இலங்கை அரசு நடத்திய கொலைவெறியாட்டம், அதற்குப் பின்னர் சரணடைந்த பொது மக்களையும் போராளிகளையும் அவர்களின் தளபதிகளையும் கொன்றொழித்த கொடுமை, சர்வதேச யுத்த நெறிகளை மீறிய விதம், ஆகியவை தற்போது வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன.
அவற்றுக்கு முழுக்காரணமே இந்த சனல் 4 தான். இதன் காரணமாக இலங்கை ஜனாதிபதி மகிந்தவும் அவர் தம் சகாக்களும் நடுங்கியபடி உள்ளார்கள் என்றால் அது மிகையாகாது. அடுத்த நிமிடம் தமக்கு என்ன நடக்கும் என்று தவித்து நிற்கும் ஒருவராக மகிந்த ராஜபக்ச மாறிவிட்டார்.
அமெரிக்காவும் இங்கிலாந்து அரசும் இலங்கைக்கு எதிரான விசாரணைகளை சர்வதேசம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்ற அதிகாரபூர்வமான அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளன. இதற்கு காரணமே இந்த சனல் 4 தொலைகாட்சிச் சேவைதான்.
இலங்கை அரசையும் அதன் ஜனாதிபதியையும் சர்வதேசக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் வகையிலான செயற்பாட்டை இந்த சனல் 4 தொலைக்காட்சிச் சேவை செய்து வருகின்றது. அதில் பல மடங்கு வெற்றிகளையும் அடைந்துள்ளது.
இந்த தொலைக்காட்சிச் சேவை காண்பித்த கொலைவெறிக் காட்சிகள் உலகெங்கும் வாழும் அனைத்து இன மக்களையும் சென்றடைந்துள்ளன. வேற்றின மக்கள் தங்கள் மூக்கில் விரல்களை வைத்தபடி அதிர்ச்சியடைந்தவர்களாய் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.
நமது தமிழ் மக்களோ கண்ணீர் விட்டபடி இவ்வறான கொடுமைகளை அனுபவித்தா நமது உறவுகளும் போராளிகளும் தங்கள் இனிய உயிர்களை இழந்தார்கள்? என்று ஏங்குகின்றார்கள்.
இவ்வாறான கொடிய பாதகச் செயல்களைச் செய்த மகிந்தாவையும் அவர்தம் இராணுவக் கொடியவர்களின் தளபதிகளையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தண்டனைகளை வழங்க வேண்டும் என்று துடியாய்த் துடிக்கின்றார்கள்.
எங்கேயோ ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள இந்த சனல்-நான்கு சேவை, ஊடகத்துறையின் நேர்மையான பணிக்கு எடுத்துக்காட்டாக, இலங்கை அரசினதும் அதன் இராணுவக் கொடியவர்களினதும் பாதகச் செயல்களை உலகின் கண்களுக்கு ஒரே பார்வையில் காண்பித்து குற்றவாளிகளை இனங்காண உதவிட முன்வருகையில், நமது தாயகத்திலோ பல கோடரிக்காம்புகள் அங்கு இலங்கை அரசைகி் காப்பாற்ற துடிக்கின்றன.
அமைச்சர்கள் என்ற இறைச்சித் துண்டைப் பரிசாகப் பெற்றுள்ள டக்ளஸ், கருணா மற்றும் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா “அம்மையார்”, ஏன்? கே. பி என்று அழைக்கப்படும் பத்மநாதன் போன்றவர்கள் இலங்கை ஜனாதிபதியையும் அவரோடு சேர்ந்து தமிழினப் படுகொலைகளை நடத்திய கொடிய இராணுவத்தையும் காப்பாற்றும் வகையில் ஊடகங்களுக்கு பொய்யான தகவல்களை வழங்கியுள்ளனர்.
இவ்வாறானவர்களை காப்பாற்றும் நோக்கோடு பலர் அவர்கள் பற்றிய சில கருத்துக்களைக் கூறினாலும் உலகம் குற்றவாளிகளை நன்கு இனங்கண்டு உள்ளது என்பதே உண்மை.
உலகத் தமிழ் மக்களின் உள்ளங்களில் உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கப்படும் இந்த சனல் நான்கு செய்து வரும் செய்திச் சமருக்கு மேலும் பல களங்கள் தோன்றியுள்ளன.
நேற்று யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் அப்பாவிப் பொது மக்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தியமை மற்றும் இங்கிலாந்திலிருந்து நாடு கடத்தப்படுகின்ற ஈழத்து தமிழர்களாகிய அகதிநிலைக் கோரிக்கையாளர்கள் ஆகியவை பற்றிய செய்திகள் இனிவரும் நாட்களில் இந்த சனல் 4 செய்திச் சமருக்கு கருப்பொருளாக விளங்கவுள்ளன என்றே நாம் கருதவேண்டும்.
எனவே தொடர்ந்தும் நீதியின் பால் நம்பிக்கை வைத்து செய்திச் சமர் செய்து வரும் சனல் 4 தொலைக்காட்சிச் சேவைக்கு உலகத் தமிழர்களாகிய நாங்கள் அனைவரும் நன்றிக் கடன் பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் இந்த அரிய பணிக்காக சனல் 4 சேவைக்கு எமது வாழ்த்துக்களை என்றும் தெரிவிக்க வேண்டும் என்றும் கனடா உதயன் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றது.
கதிரோட்டம் - கனடா உதயன்


No comments:
Post a Comment