கிளிநொச்சி நகர வீதியில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென அவலக்குரல் எழுப்பியதில் நேற்று முந்தினம் இரவு அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து தெரியவருவதாவது:
சம்பவ இரவு 8.30 மணியளவில் கிளிநொச்சி நகரப் பகுதியில் இருந்து பரந்தன் பகுதி நோக்கி வேறு ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இந்த 26 வயது மதிக்கத்தக்க பெண் இரு இளைஞர்கள் தன்னை மறித்ததாகக் கூறிக் கூச்சலிட்டார். சம்பவத்தைக் கேட்டு அந்த இடத்துக்கு வந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் விசாரணை செய்தனர். குறித்த பெண் யாழ்.அச்சுவேலியைச் சேர்ந்தவர் என்றும், அக்கராயன் குளத்தில் இருந்து தனது இடத்துக்குச் செல்வதாகவும் கூறியுள்ளார்.
பஸ்ஸுக்காக கிளிநொச்சி டிப்போவில் நின்றதாகவும் அங்கு சில இளைஞர்கள் தொல்லை கொடுத்ததால் தான் வீதியால் நடந்து சென்றதாகவும் அப்போது ஒருவரின் மோட்டார் சைக்கிளை மறித்து ஏறிப் பரந்தன் நோக்கிச் சென்றதாகவும் தெரிவித்தார். இதன்போது கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்திக்கு அண்மையாக இரு இளைஞர்கள் தன்னை மறித்ததாகவும் அவர்களைக் கண்டு அச்சத்திலேயே தான் கூச்சலிட்டதாகவும் அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார். அந்தப் பெண் தன்னை வழி மறித்ததாகக் கூறிய இரு இளைஞர்களும் தாம் குறித்த பெண்ணை மறிக்கவில்லை என்றும் வீதியால் வந்த நண்பர்களையே மறித்ததாகவும் தெரிவித்தனர்.
இவர்கள் நால்வரையும் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுவே இன்றைய கிளிநொச்சியின் நிலையாக உள்ளது.


No comments:
Post a Comment