
யாழ்.பல்கலைக்கழக ஊடகவளம் மற்றும் இதழியல் துறை மாணவரும், தமிழ் மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்ஸன் கடந்த 2007 ஆகஸ்ட் முதலாம் திகதி அதிகாலை 5 மணிக்கு அவரது வீட்டில் வைத்து மோட்டர் சைக்களில் சென்ற இரண்டு ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். நாளை நிலக்ஸனின் 04 வது நினைவுநாள்.
நிலக்ஸன் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் சாளரம் சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். இவர் யாழ் மாவட்ட மாணவர் அமைப்புடனும் தொடர்புடையவராக இருந்தவர்.
நிலக்ஸன் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு நான்கு வருடங்கள் முடிந்துவிட்டது. நிலக்ஸனின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.
நிலக்ஸன் மட்டுமல்ல இன்று வரை நிலக்ஸன் உட்பட இலங்கையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய விசாரணைகள் எதுவுமே முற்றுப்பெறவில்லை.
அச்சுறுத்தல்கள் காரணமாக இன்றுவரை வெளிநாடுகளுக்கு புகலிடம்தேடி ஓடும் ஊடகவியலாளர்கள் பட்டியல் நீண்டுகொண்டுதான் இருக்கிறது.
நேற்று முன்தினம் கூட உதயன் நாளிதளின் செய்தி ஆசிரியர் ஆயுததாரிகளால் தாக்கப்பட்டுள்ளார்.
ஆனால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் சார்ந்த விடயங்களில் ஊடக அமைப்புக்களும் சர்வதேச ஊடகம்சார் மற்றும் சாராத ஐ.நா அமைப்புக்களும் ஊடகவிலாளர்களின் மரணத்தின்போது கண்டன அறிக்கை. ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலம். மலர்வளையம் வைத்தல் போன்ற சம்பிரதாயங்களோடு தங்கள் பணியை முடித்துவிடுகின்றன.
தங்கள் உயிர்களைத் துச்சமாக்கி மரணித்துப்போன ஊடகவியலாளர்களின் குடும்பங்கள் என்ன செய்கிறன? அவர்களது எதிர்காலம் அவர்களிற்கான நீதி போன்ற விடயங்களில் மௌனித்துப் போனவர்களாகவே இருக்கின்றனர்.



No comments:
Post a Comment