
தந்தை செல்வா அவர்களினால் தமிழ் தேசியத்தை நிலைநாட்டுவதற்காகவும்,ஈழத் தமிழ் மக்களுக்கான சுயாட்சியை நிலை நிறுத்தவும் தோற்றுவிக்கப்பட்ட தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதையே ஒவ்வொரு தேர்தலிலும் எடுத்துக் காட்டிய தமிழ் மக்களினதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீதும் கரியைப் பூசுவது போல் யாழ் மாநகர சபை உறுப்பினர் திரு.றெமெடியஸ் அவர்கள் நடந்து கொண்ட முறை உலகத் தமிழ் இனத்தையே தலை குனிய வைத்துள்ளது.
எந்தக் கட்சியினால் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டாரோ அந்தக் கட்சியின் கொள்கைகளை மதித்து நடக்கவேண்டும் என்பதை திரு.றெமெடியஸ் உணராதவர் அல்ல.
இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருமைப்பாட்டிற்கும், கொள்கைக்கும் விரோதமாக நடந்து கொண்ட திரு.றெமெடியஸ், தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும்,அல்லாவிடில் எந்த மக்களால் தெரிவு செய்யப்பட்டாரோ அந்த மக்களைப் புறக்கணித்தமைக்காக தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டும்.
இல்லையேல் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியமைக்காகவும், மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியமைக்காகவும் அவர்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரைக் கட்சியில் இருந்தும், மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கவேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக கொள்கைப் பற்றுறுதியுடன் செயலாற்றும் எதிர்க்கட்சித் தலைவருடன் ஒத்துழைக்கக் கூடிய தன்மானம் மிக்க ஒருவரை நியமித்து கட்சியின் கௌரவத்தையும், பாரம்பரியத்தையும் நிலைநிறுத்த வேண்டும்.
இவ்வாறான நடவடிக்கைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினூகத் தேர்தலில் நின்ற சந்தர்ப்பவாதிகளையும், கட்சியின் கட்டுக்கோப்பை மீறி தான்தோன்றித்தனமாக அறிக்கைகளையும், கடிதங்களையும் அனுப்பிக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பாடமாகவும், முன்னுதாரணமாகவும் அமையும்.
வல்வை நகரசபை உறுப்பினர் ந.அனந்தராஜ்


No comments:
Post a Comment