நடிகர், நடிகைகளிடமும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. நடிகர்கள் சத்யராஜ், பரத், பார்த்திபன், மணிவண்ணன், சீனு, நடிகை ரோஜா டைரக்டர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், வேலு பிரபாகரன், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் ஏற்கனவே கையெழுத்திட்டனர்.
தற்போது நடிகை அஞ்சலியும் கையெழுத்திட்டார். விடுதலை சிறுத்தைகள் இயக்க செய்தி தொடர்பாளர் வன்னிஅரசு, நிர்வாகிகள் சங்கத்தமிழன், எழில் இமயன், விடுதலைச் செல்வன், இரா.செந்தில் ஆகியோர் நேரில் சென்று கையெழுத்து வாங்கினர். இயக்குனர் மு.களஞ்சியத்திடமும் கையெழுத்து வாங்கப்பட்டது.
கையெழுத்திட்டது பற்றி நடிகை அஞ்சலி கூறியதாவது:
இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அங்கு சண்டை நடந்த போது இந்த செய்திகளை படித்து தெரிந்து கொண்டேன்.
ஆனால் சமீபத்தில் டி.வி.யில் நேரடியாகவே அந்த படுகொலைகளை பார்த்து அதிர்ச்சியானேன். பெண்கள், சிறுவர்கள், வயதானவர்களை சுட்டு போட்டு இருந்தனர். ஒரே பிணங்களாக இருந்தது. அதை பார்த்து அழுது விட்டேன்.
ஈழத் தமிழ் இனத்தை இப்படி கொன்று குவித்த ராஜபக்சவுக்கு தண்டனை வழங்க விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திருமாவளவன் கையெழுத்து இயக்கம் நடத்துவது பாராட்டுக்குரியது. நானும் அதில் கையெழுத்திட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:
Post a Comment