இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிந்துவிட்டதாக தெரியவருகிறது. எனினும் இரண்டு தரப்புக்களும் இன்னும் இதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.இதுவரை பத்துச் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்ற நிலையில், அதில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இனிமேல் பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கு மூன்று நிபந்தனைகளை முன்வைத்திருந்தது. அந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவையும் அந்தக் கட்சி விதித்திருந்தது. இரண்டு தரப்புக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை கொழும்பில் 10ஆம் சுற்றுப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இந்த நிலையில் அது குறித்து பதிலறிக்கை வெளியிட்டிருந்த இலங்கை அரசாங்கம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப்புலிகள் அமைப்பைப் போன்று செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், அந்த நிபந்தனைகளை ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளது.
அத்துடன் இந்தப் பேச்சுவார்த்தைகளில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு விலகுமானால், தாம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாகவே இனிமேல் பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும் என்று, அரசாங்க தரப்பில் இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு செயலாளராகச் செயற்பட்ட சஜின் வாஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளாகவே பார்க்கப்பட்டு வந்தன.
ஆனால், இதனை ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையாக வர்ணித்துள்ள சஜின் வாஸ் குணவர்த்தன அவர்கள், இந்த இரு கட்சிகளும் யாரினதும் ஏக பிரதிநிதிகள் அல்ல என்பதால், பரந்த அளவிலான பேச்சுவார்த்தைகள் மூலமே, நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து முடிவு காண முடியும் என்றும் கூறியுள்ளார்.
இவை குறித்துக் கருத்து வெளியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தாம் பேச்சுவார்த்தைகளை முறிக்கவில்லை என்று கூறியிருப்பதுடன், குறித்த கால அளவுக்குள் குறிப்பிட்ட விடயங்கள் பற்றி அரசாங்கம் தமது நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும் என்று கோரிக்கை அடிப்படையிலேயே கூறியிருந்ததாகவும் தெரிவித்தார்.
அத்துடன், இந்த விடயங்கள் குறித்து பதில் தரப்படும் என்று கூறி அரசாங்கம் காலம் கடத்தி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சில் இருந்து விலகியமை காரணமாக இனி அரசாங்கம் அமைக்கவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூலம் பிரச்சினைக்கான தீர்வுகளை காண முயற்சிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது.
எனினும் குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அரசாங்கத்தரப்பு தவிர்ந்த ஏனைய அனைத்துக்கட்சிகளும் நிராகரித்துள்ளன.
எனவே இலங்கை அரசாங்கத்தின் பிழையான அணுகுமுறை காரணமாக வரலாற்றில் மீண்டும் ஒருமுறை சமாதான பேச்சுவார்த்தை முறிவடைந்துள்ளது.
எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தற்போது முனைப்புகள் மேற்கொள்ள முடியாத கட்டம் இப்போது தோன்றியுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.


No comments:
Post a Comment