
எமது இனத்தைக் காட்டிக் கொடுத்து அரசியல் பிளைப்பு நடத்தும் ஒருவரால் விடுதலை வீரன் சங்கிலியனின் சிலை திறக்கப்படுவதா? எனக் கூறி யாழ். மாநகரசபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலை திறப்புவிழாவைப் புறக்கணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் பல ஆண்டுகாலமாக கம்பீரத் தோற்றத்துடன் வீற்றிருந்து உடையத்தெறியப்பட்ட சங்கிலியன் சிலைக்குப் பதிலாக மறு சீரமைக்கப்பட்ட சங்கிலி மன்னனின் உருவச்சிலை நாளை புதன்கிழமை காலை 7 மணிக்கு யாழ்.மாநகரசபையினால் திறந்து வைக்கப்படவுள்ளது. அந்தச் சிலையினை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா திறந்து வைக்க உள்ளமையைக் கண்டித்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநகரசபை எதிர்க் கட்சியினர் சிலைத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கவுள்ளனர்.
மீண்டும் திறந்து வைக்கப்படவுள்ள சங்கிலியன் சிலையின் கீழ் உள்ள பெயர்ப் பலகையில் மாற்றம் இருக்கக் கூடாதெனவும் ஒரு சிலையை பலதடவை திறந்து வைப்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயமல்ல எனவும் மாநகர சபையின் எதிரணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதேவேளை தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளுக்கு மாறாக எமது இனத்தைக் காட்டிக் கொடுத்து அரசியல் பிளைப்பு நடத்தும் ஒருவரால் விடுதலை வீரன் சங்கிலியனின் சிலை திறக்கப்படுவதனை ஒரு மானமுள்ள தமிழன் விரும்ப மாட்டான். எனவே இந்த சிலை திறப்பு விழாவை புறக்கணிப்பதாக மாநகரசபை எதிர்க் கட்சி உறுப்பினர்கள் எழுவர் கையொப்பமிட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.


No comments:
Post a Comment