விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவீரர் நாள் நிகழ்ச்சி, சென்னை கோயம்பேட்டில் நேற்று நடந்தது. மாவீரர் தின தீபத்தை கட்சி தலைவர் திருமாவளவன் ஏற்றி வைத்து, ஈழப் போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசும்போது,
’’ஈழத்தில் வடக்கு, கிழக்கு பகுதிக்காக மட்டும் போராட்டம் நடக்கவில்லை. அது, ஒட்டுமொத்த தமிழர்களுக்கான போராட்டம். பெண் விடுதலைக்காக போராடுவது, ஒடுக்குதலுக்கு எதிரான போராடுவது, மக்கள் விடுதலைக்காக போராடுவது எல்லாமே விடுதலை போராட்டம்தான்.
தமிழகத்தில் இன்னும் சாதி ஒழிப்பு போராட்டம் தேவைப்படுகிறது.
ஈழத்தமிழர் போராட்டத்தை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களின் போராட்ட குணமும் மதி நுட்பமும் நமக்கு தேவை.
இலங்கை தமிழர்களுக்கு விடுதலை வாங்கித் தருவேன் என்று ஜெயலலிதா பேசினார். ஆனால், அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று கோர்ட்டில் கூறுகிறார். 3 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் போடுகிறார்.
ஆனால், நீதிமன்றத்தில் அவர்களை விடுவிக்கக் கூடாது என்று அரசு வக்கீல் கூறுகிறார். மாவீரர் தின கூட்டத்துக்கு அரசு அனுமதி மறுக்கிறது. இலங்கை தமிழர் பிரச்சனையில் ஜெயலலிதா இரட்டை வேடம் போடுகிறார்.
பரமக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.1 லட்சத்தை தமிழக அரசு வழங்கியது. விபத்து, மழை வெள்ளத்தால் பலியானோருக்கு ரூ.2 லட்சத்தை அரசு வழங்குகிறது.
இது என்ன ஓரவஞ்சனை. ஈழத்தமிழர் பிரச்னையிலும் தலித் மக்கள் பிரச்னையிலும் அவருக்கு கவலை இல்லை. அவரது இரட்டை வேடம் வெளிப்பட்டு வருகிறது. ஈழப் போராட்டமும் சாதி ஒழிப்பு போராட்டமும் தொடரும். அதற்கு நம்மை தயார்படுத்தி கொள்ள வேண்டும்’’என்று பேசினார்.


No comments:
Post a Comment