இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்றவை எனத் தெரிவிக்கப்படும் போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு இலங்கை அரசுக்கு உள்ளது. எனினும் இலங்கையில் வளர்ந்துவரும் சர்வாதிகாரப் போக்கையே நாங்கள் காண்கிறோம் என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயட் தெரிவித்துள்ளார்.கடந்த ஒக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக பிரதமர் ஸ்ரீபன் ஹார்பர் விமர்சித்திருந்தார். இதனையடுத்தே வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயட் இதனைத் தெரிவித்தார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்த சில நாடுகள் 10 வருடங்களை எடுத் துள்ளன. சில நாடுகள் நல்லி ணக்கத்தை ஏற்படுத்தவே யில்லை. ஆனால் இது மிக முக் கியமானது என ஜோன் பயட் தெரிவித்துள்ளார்.
படையினர் யுத்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டனர் எனத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள இலங்கை அரசு, இதுதொடர்பான விசாரணையை நடத்துவது குறித்தும் மறுப்புத் தெரிவித்துள்ளது.
அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரான ஐ.நா.வின் அண்மைய அறிக்கையை ஜோன் பயட் பாராட்டியுள்ளார். 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, யுத்தக் குற்றச்செயல்கள் குறித்து விசாரணையை முன்னெடுக்கப்பட வேண்டுமென இலங்கைக்கு மேற்குலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களானபோதிலும் தமிழ்ச் சமூகத்தவருடனான அர்த்தமுள்ள நல்லிணக்கமொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை காணவில்லை என்றும் அமைச்சர் ஜோன் பயட் தெரிவித்துள்ளார். இலங்கை அரசின் வளர்ந்து வரும் சர்வாதிகாரப் போக்கையே நாங்கள் கண்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இது இவ்விதமிருக்க:
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ள நிலையில், இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் நேரடிப் பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகி வருகிறார் என்று தெரியவருகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு இல்லாமல் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முழுமையடையாது எனக் கருதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தலைவர் சம்பந்தனுடன் நேரடிப் பேச்சு நடத்தி இதனை விளக்கும் அதேசமயம் அதில் இணைந்து இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண முன்வருமாறு வலியுறுத்துவார் என்று ஜனாதிபதியுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக நேற்றுமுன்தினம் கருத்து தெரிவித்திருந்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், இரு தரப்புப் பேச்சுகளில் ஓர் இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர்தான் தெரிவுக்குழு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராயும் எனத் தெரிவித்திருந்தார்.
கூட்டமைப்பின் இந்த நிலைப்பாட்டை அரசின் மூத்த அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் நேற்று விளக்கியுள்ளனர். இதனையடுத்தே இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருடன் நேரடிப் பேச்சு நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
நாட்டின் தலைவர் என்பதற்கு அப்பால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற கோதாவில் இருந்து கொண்டு இந்தப் பேச்சை நடத்துவதற்கு ஜனாதிபதி உத்தேசித்துள்ளார் என்றும் வெகுவிரைவில் இந்தப் பேச்சு இடம்பெறும் என்றும் தெரியவருகின்றது.


No comments:
Post a Comment