
மகிந்தாவுக்கு எதிராக போர்க்குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்க நீதிமன்றத்தில் மூன்று ஈழத் தமிழர்கள் தாக்கல் செய்த வழக்கில், தமிழ் இணையத்தளத்தின் மூலம் ஜனாதிபதிக்கு அழைப்பாணை வழங்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் (District Court of The District of Columbia) மதிப்புக்குரிய காசிப்பிள்ளை மனோகரன் உட்பட மூன்று வழக்காளிகள் தை மாதம் 2011ல் தாக்கல் செய்த வழக்கில் நீதிக்குப் புறம்பான விதத்தில் தமது உறவுகளை அரச படைகள் கொலை செய்த குற்றத்திற்கு மகிந்தா தண்டிக்கப்பட வேண்டும் என்று குற்றஞ் சுமத்தியுள்ளனர்.
திருகோணமலை கடற்கரையில் வைத்து காசிப்பிள்ளை மனோகரனின் மகன் ராஜீகர் மனோகரனும் இன்னும் ஜந்து இளவயது மாணவர்களும் சில வருடங்களுக்கு முன்பு காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டமை. அதேபோல் பட்டினிக்கு எதிரான நடவடிக்கை (Action Against Hunger) என்ற தொண்டு அமைப்பு ஊழியர்கள் 17பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக இவ்வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்தப் படுகொலைகளுக்கு சனாதிபதியும் அரசியல் சாசனத்தின் மூலம் முப்படைத் தளபதியான மகிந்தா கட்டளைப் பொறுப்பு (Command Responsibility) ஏற்கவேண்டும் என்ற அடிப்படையில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
காசிப்பிள்ளை மனோகரன், மேற்கூறிய தொண்டு நிறுவன ஊழியர் பிறேமதாஸ் ஆனந்தராஜா மனைவி கலைச்செல்வி லவான், கொல்லப்பட்ட தேவராஜா குடும்ப நால்வரின் உறவினர் ஜெயக்குமார் ஐயாத்துரை ஆகிய மூவரும் வழக்காளிகளாவர்.
மகிந்தாவுக்கு நீதிமன்ற அழைப்பாணையை ஏற்க மறுத்ததாலும் அவருக்கு அழைப்பாணை வழங்குவது கடினமான காரணத்தாலும் ஆவணி மாதம் 13, 2011ம் நாள் நீதிபதி கொலார் – கொடெலி (Ms Kollar Kotelly) தமிழ்நெற் இணையத்தின் மூலம் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் கார்த்திகை 22 2011ம் நாள் வழக்காளிகளின் முதன்மைச் சட்டத்தரணி மேலதிக தகவல்களை நீதிமன்றத்திற்கு வழங்கினார். கொழும்பு ஊடகங்களில் அழைப்பாணையின் பிரதியைப் பிரசுரிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்று அவர் எழுத்து மூலம் சமர்ப்பித்தார்.
அரசை விமர்சிக்கும் ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அரசியல் பழிவாங்கல் படுகொலைகள், காணாமற் போதல்கள் நடப்பதற்கான ஆதாரச் சத்தியக் கடதாசிகளையும் பிற ஆவணங்களையும் அவர் நீதி மன்றத்திற்கு வழங்கினார்.
உள்ளுர்ப் பிரசுரம் எதிரியின் ஊடகச் சுதந்திரத்தின் மீதான பாரதூரமான தாக்குதல்களால் தடைபட்டதால் இதைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் உள்ளுர் பிரசுர உத்தரவை நீக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் மகிந்தாவுக்கு அஞ்சல் முகவரி மூலமாகவும் அவருடைய முகப்புத்தகம் (Facebook) மற்றும் ருவிற்ரர் (Twitter) தளங்கள் மூலமாகவும், நீதிபதி விரும்பினால் அவ்வாறு அழைப்பாணை அனுப்ப அனுமதி அளிக்குமாறும் அதே வழக்கறிஞர் மனுச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment