
முல்லைத்தீவு கல்லாறு பாடசாலையில் மைதானத்தில் கடந்த மாவீரர் தினத்தன்று தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டிருந்ததாக, அங்குள்ள பொதுமக்கள் ஈழம் டெய்லியின் வன்னிச் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.
26ஆம் நாள் இரவு ஏற்றப்பட்ட தமிழீழ தேசியக்கொடி மறுநாள்வரை மைதானத்தில் பட்டொளி வீசி பறந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு கோபத்துடன் விரைந்த சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படையினர் தமிழீழ தேசியக் கொடியை இறக்கி தம்முடன் எடுத்து சென்றதுடன், விசாரணைக்கென 50 இற்கும் மேற்பட்ட இளையோர்களை அழைத்து சென்று கடும் விசாரணையின் பின்னர் விடுதலை செய்துள்ளனர்.
அதிகாலையில் பாடசாலை மைதானத்தில் பறந்த தமிழீழ தேசியக் கொடியை மக்கள் அமைதியாக தரிசித்து சென்றதாகவும், 2009ஆம் ஆண்டின் பின்னர் தமிழீழ தேசியக் கொடி வன்னிக் காற்றில் அசைந்தாடக் கண்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டதாகவும் நேரில் பார்த்வர்கள் கூறினர்.
இதேநேரம், கிளிநொச்சி மேற்கு வலைப்பாட்டில் 26ஆம் நாள் இரவு மாவீரர் நினைவு மண்டபம் ஒன்று சிவப்பு மஞ்சள் தேசிய நிற கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததாகவும், அதிகாலை அப்பகுதிக்கு வந்த படையினர் மக்களை தாக்கி அவற்றை அப்புறப்படுத்தி எடுத்து சென்றதாகவும் மேலும் அறிய முடிகின்றது.
இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள போராளி ஒருவர் தமிழர் மண்ணை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள சிறீலங்காவுக்கு மீண்டும் கடினமான காலம் ஆரம்பமாகின்றது என்பதற்கு இவை சான்றாகவும், சமிக்கையாகவும் காணப்படுகின்றது எனக் கூறினார்.
போர் மரபுகளை மீறி இன அழிப்பு மூலம் தமிழ் மக்களின் உரிமைப்போரை பலவீனப்படுத்தியுள்ள சிறீலங்கா, அந்த வெற்றிக்கழிப்பில் நீண்டகாலம் தமிழ் மக்களை அடிமைப்படுத்த முடியாது என்பது இம்முறை மாவீரர் வாரத்தில் மக்களால் தெளிவாக எடுத்து கூறப்பட்டுள்ளது எனவும் அந்தப் போராளி ஈழம் டெய்லியின் செய்தியாளிடம் சுட்டிக்காட்டினார்.
தாயகத்தில் உள்ள மக்கள் சிறீலங்கா அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான கருத்துக்களையும், செயற்பாடுகளையும் துணிவாக முன்வைத்துவரும் இந்தக் காலப்பகுதியில், புலம்பெயர்ந்த மக்களின் செயற்பாடுகள் இனவழிப்பு, மற்றும் போர்க் குற்ற அரசாங்கத்தை நீதியின் முன்னிறுத்தவும், தாயக மக்களின் மீள்கட்டுமானத்திற்கு உதவியாகவும் அமைய வேண்டும் எனவும், புலம்பெயர்ந்த மக்கள் இவற்றிலேயே தமது கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் அந்தப் போராளி மேலும் சுட்டிக்காட்டினார்.


No comments:
Post a Comment