அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
ஒருங்கிணைப்புக் குழு,
தமிழீழ மாணவர் எழுச்சிப் பேரவை,
பிரித்தானியா
15.09.2011
அன்பார்ந்த தமிழீழ மக்களே,
ஆண்டுதோறும் உலக நாடுகள் தோறும் வெகு சிறப்பாக இடம்பெறும் மாவீரர்களை நினைவுகூரும் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளை குழப்புவதற்கான நாசகார சதி நடவடிக்கைகளில் முழுவீச்சுடன் தனது ஒட்டுக்குழுவான கே.பி-ருத்ரா குழுவினரை சிங்கள அரசு களமிறக்கியுள்ளது.
இதன் ஓர் அங்கமாக பிரித்தானியாவில் வழமை போன்று இடம்பெறும் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்விற்கு மாற்றீடாக பிறிதொரு நிகழ்வை நவம்பர் 27ஆம் நாளன்று கே.பி-ருத்ரா ஒட்டுக்குழு ஏற்பாடு செய்துள்ளது.
பிரித்தானியாவில் 1990ஆம் ஆண்டிலிருந்து வெவ்வேறு மண்டபங்களில் நடைபெற்று வந்த தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள், 1999ஆம் ஆண்டு முதற்தடவையாக ‘லண்டன் அரீனா’ எனும் மிகப் பிரமாண்டமான மண்டபத்திற்கு மாற்றப்பட்டமை தமிழீழ தேசியப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு நினைவில் இருக்கும்.
இந்த வகையில் 1999ஆம், 2000ஆம், 2001ஆம், 2002ஆம் ஆண்டுகளில் ‘லண்டன் அரீனா’வில் இடம்பெற்று வந்த தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் அம்மண்டபம் மூடப்பட்டதை அடுத்து 2003ஆம், 2004ஆம் ஆண்டுகளில் ‘எக்செல்’ மண்டபத்திற்கு மாற்றப்பட்டிருந்தன.
எனினும் 2005ஆம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக ‘எக்செல்’ மண்டபத்திலிருந்து ‘வெம்பிளி அரீனா’, ‘அலக்ஸாண்ட்ரா பலஸ்’ ஆகிய மண்டபங்களுக்கு மாற்றப்பட்டு, பின்னர் 2006ஆம் ஆண்டு ‘ஹரோ லெசர் சென்ரர்’ உட்பட ஐந்து இடங்களில் உள்ள மண்டபங்களில் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் 2007ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை மீண்டும் ‘எக்செல்’ மண்டபத்தில் இடம்பெற்று வந்த தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் இம்முறை தவிர்க்க முடியாத காரணங்களால் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
நவம்பர் 24ஆம் நாள் முதல் நவம்பர் 27ஆம் நாள் வரையான நான்கு நாட்களுக்கு ‘எக்செல்’ மண்டபத்தின் முழுப்பரப்பளவையும் ‘ரொப்கியர்’ (TopGear) எனப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சி நிறுவனம் வாடகை எடுத்ததன் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் இதற்கு மாற்றீடாக இலண்டனில் உள்ள பிறிதொரு பிரமாண்டமான மண்டபத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளில் வழமையான செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் இதனைக் குழப்பும் நோக்கத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்ற பெயரில் இலண்டனில் களமிறங்கியிருக்கும் சிங்கள அரசின் கைக்கூலிகளான கே.பி-ருத்ரா ஒட்டுக்குழுவினர், மக்களிடையே பல்வேறு குழப்பகரமான வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். கடன் அட்டை மோசடி, குழு மோதல், கொள்ளை, தகாத பாலியல் உறவு எனப் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் சமுக விரோதிகளைப் பயன்படுத்தியும், சிங்கள அரசுக்கு சோரம் போயுள்ள தேச விரோதிகளைக் கையாண்டும் இக்கைங்கரியத்தில் இவ் ஒட்டுக்குழு ஈடுபட்டு வருகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு இயக்கத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்டு, வன்னிப் போரில் சிங்களப் படைகளிடம் சரணடைந்து, பின்னர் சிங்களப் புலனாய்வாளர்களால் இந்தியா ஊடாக பிரித்தானியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட தயாபரன் (சங்கீதன்) என்ற தேச விரோதியே இச் சதி நடவடிக்கைகளை நெறிப்படுத்தி வருகின்றார்.
இச்சிங்கள ஒட்டுக்குழு உளவாளியின் தலைமையில் இயங்கும் சமூக விரோதிகளும், தேச விரோதிகளும் மாவீரர் நாள் நிகழ்வை வழமையாக ஏற்பாடு செய்யும் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்திற்கு சொந்தமான இணையத்தள முகவரியை தற்பொழுது ஆக்கிரமித்திருப்பதோடு, வணங்கா மண் கப்பலுக்கு திரட்டப்பட்ட நிதியில் கையாடப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி குத்தகைக்கு எடுக்கப்பட்ட கட்டிடம் ஒன்றையும் தமது அலுவலக முகவரியாகப் பதிவு செய்துள்ளனர்.
‘எக்செல்’ மண்டபம் முழுவதையும் நவம்பர் 27ஆம் நாளன்று ‘ரொப்கியர்’ தொலைக்காட்சி நிகழ்ச்சி நிறுவனம் வாடகைக்கு எடுத்துள்ள நிலையில், ‘எக்செல்;’ நிறுவனத்திற்கு சொந்தமான அரை மைல் தொலைவில் உள்ள வெறும் இரண்டாயிரம் பேரை மட்டும் உள்ளடக்கக்கூடிய கப்பல் திருத்தும் மண்டபம் ஒன்றை இவ் ஒட்டுக்குழு தற்பொழுது வாடகைக்கு எடுத்துள்ளது. எனினும் இவ்வுண்மையை மக்களிடம் மூடிமறைத்திருக்கும் இக்கும்பல், ‘எக்செல்’ மண்டபத்தை பத்து ஆண்டுகளுக்கு தாம் வாடகைக்கு எடுத்திருப்பதாகவும், இம்முறையும் ‘எக்செல்’ மண்டபத்திலேயே தேசிய நினைவெழுச்சி நாள் இடம்பெறும் என்றும் பொய்ப்பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றது.
இத்தகவல் பொய்யானது என்பதை உறுதிப்படுத்துவதற்கு ‘எக்செல்’ நிறுவனத்தின் பின்வரும் முகவரியை அழுத்திப் பார்வையிடுமாறு எமது உறவுகளிடம் அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்: http://www.excel-london.co.uk/whatson/2011/11/
இதேநேரத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வை பல்லாயிரக்கணக்கான மக்களை உள்ளடக்கக்கூடிய பிறிதொரு பிரமாண்டமான மண்டபத்தில் நிகழ்த்துவதற்கான ஏற்பாடுகளை வழமையான செயற்பாட்டாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும் இப் பிரமாண்டமான மண்டபத்திற்கு மக்கள் செல்வதைத் திசைதிருப்பி, எக்செல் நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டாயிரம் பேரை மட்டும் உள்ளடக்கக்கூடிய கப்பல் திருத்தும் மண்டபத்திற்கு மக்களை வரவழைத்து, பின்னர் அங்கு இடமில்லை என்று கூறி அவர்களைத் திருப்பியனுப்புவதற்கு சிங்கள ஒட்டுக்குழு திட்டமிட்டுள்ளது.
மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி, ஈகச்சுடரேந்தி எமது உறவுகள் தொழுகை செய்யும் செய்யும் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வைக் குழப்புவதே இச்சிங்கள ஒட்டுக்குழுவின் நோக்கமாகும்.
சிங்கள ஒட்டுக்குழுவின் இவ் நாசகாரச் சதித் திட்டத்தை இனம்கண்டு கப்பல் திருத்தும் மண்டபத்திற்கு செல்வதையும், இவர்களுக்கு நன்கொடையளிப்பதையும் தவிர்த்து, இவர்களைப் புறந்தள்ளுமாறு எமது உறவுகளுக்கு இளைய தலைமுறையினராகிய நாம் அறைகூவல் விடுக்கின்றோம். அதேநேரத்தில் வழமையான செயற்பாட்டாளர்களால் ஒழுங்கு செய்யப்படும் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்விற்கு ஒத்துழைப்பு வழங்கி, அவர்களால் ஏற்பாடு செய்யப்படும் பிரமாண்டமான மண்டபத்திற்கு வருகை தந்து எமது காவற்தெய்வங்களுக்கு ஈகச்சுடர் ஏற்றுமாறு எமது உறவுகளிடம் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’


No comments:
Post a Comment