நமது உறவுகளை துடிக்கத் துடிக்க கொன்று குவித்த இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அமெரிக்கா வருகின்றார். அவர் வருகின்ற தேசத்தில் அவருக்கு செங்கம்பளம் விரிப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் தயாராக இல்லை. ஆனால் புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள் கம்புகளில் பறக்கும் நமது கொடிகளைத் தாங்கியபடி அவருக்கு “தண்டனையை வழங்குங்கள்” என்று கோசமிடுவதற்கு தயாராக வேண்டும்.ஆமாம் நமது உறவுகளே!
நமது உறவுகளுக்கு “பயங்கரவாதிகள்” என்ற நாமத்தை சூட்டி கொடிய ஆயுதங்களால் கொன்று குவித்த மகிந்த ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் பங்குகொண்டு உரையாற்றுவதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வருகின்றார் என்ற செய்தி நமக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல இல்லையா?
அவருக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையில் சிறப்புக்குழுவின் அறிவிப்பையும் அசட்டை செய்து விட்டு அமெரிக்கா வருகின்ற அவருக்கு நாம் எவ்வாறு எதிர்ப்பை காட்டலாம் என்பதோடு மட்டுமல்லாது, அவர் உரையாற்றப் போகும் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் அதிகபட்ச நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் தெரியப்படுத்தும் வகையில் மகிந்த'வின் போர்க்குற்றங்கள் தொடர்பான விடயங்களை நாம் அம்பலப்படுத்த வேண்டும்.
இந்த வாரம் இலங்கைக்கு வெளியே உள்ள நாடுகளில் மகிந்த'விற்கு எதிரான பல விடயங்கள் அரங்கேறியுள்ளன.
குறிப்பாக அவரது போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளோ அல்லது கவனிப்புக்களோ முற்றாகவே நகராமல் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதை பல பேச்சாளர்கள் எடுத்துக் கூறியுள்ளார்கள்.
உதாரணமாக கனடாவைச் சேர்ந்தவரும் சட்டத்தரணியுமான திரு ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் ஜெனிவா பிராந்திய அலுவலகத்தில் மனித உரிமைகள் தொடர்பான கூட்டத்தொடரில் உரையாற்றியுள்ளார்.
மேற்படி இரண்டு தடவைகளிலும் இலங்கை அரசினதும் மகிந்த ராஜபக்ச'வினதும் போர்க்குற்றங்கள் தொடர்பான விடயங்களில் சர்வதேசமும் ஐக்கிய நாடுகள் சபையும் துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் அங்கு வாழும் தமிழ் மக்கள் மேற்படி விடயங்கள் தொடர்பான சிறிய அளிவிலான கருத்தரங்குகளை நடத்தி அந்த நாட்டு அரசியல்வாதிகளுக்கு மீண்டும் மகிந்த'வின் போர்க்குற்றங்கள் தொடர்பான விடயங்களை வலியுறுத்தியுள்ளனர்.
மறுபக்கத்தில் அமெரிக்காவில் பல உயர்மட்ட அரசியல்வாதிகளுக்கு மகிந்த'வின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஒளிப்படங்களும் காண்பிக்கப்பட்டுள்ளன.
இதே போன்று அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மகிந்தாவின் அமெரி;க்க வருகையை முன்னிட்டு ஆர்;ப்பாட்டங்களை நடத்த புலம் பெயர் தமிழ்மக்கள் தயாராகிவிட்டனர்.
இவ்வாறு பார்க்கும் போது இனிவரும் நாட்களும் வாரங்களும் மாதங்களும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு ஒருமித்த நோக்கமுள்ள நாட்களாகவே அமையவேண்டும்.
போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ச'விற்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதே புலம் பெயர்ந்த தமிழர்களின் இந்த ஒரே நோக்காகவேண்டும். இதையே கனடா உதயன் வலியுறுத்துகின்றான்.
கனடா உதயன் கதிரோட்டம்


No comments:
Post a Comment