
அடுத்த ஆண்டு தொடக்கம் மீள்குடியேற்ற அமைச்சைக் கலைத்து விட சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பெரும்பாலும் பூர்த்தியடைந்து விட்ட நிலையில் இந்த அமைச்சு தேவையற்றது என்று கருதப்படுவதாலேயே, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் அந்த ஊடகம் தகவல் வெளியிடுள்ளது.
2009இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், சுமார் 300,000 பேர் இடம்பெயர்ந்திருந்த நிலையில் மீள்குடியேற்ற அமைச்சு உருவாக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது 8000 பேர் மட்டும் மீளக்குடியேற்றப்படாதுள்ளனர். இவர்களும் அடுத்த சில மாதங்களில் மீளக்குடியேற்றப்பட்டு விடுவர் என்றும் சிறிலங்கா அரசாங்கம் நம்புகிறது.
அதேவேளை சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்து மூன்று முகாம்களில் வசித்து வரும் 900 குடும்பங்களையும் இடம்பெயர்ந்தோராக கருதுவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம கூறியுள்ளார்.
இந்தநிலையிலேயே மீள்குடியேற்ற அமைச்சைக் கலைத்து விட்டு, அதுசார்ந்த எஞ்சியுள்ள பணிகளை மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் ஒப்படைக்கவும் சிறிலங்கா அதிபர் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மீள்குடியேற்ற அமைச்சு கலைக்கப்பட்டால் அந்த அமைச்சின் பிரதி அமைச்சராக பொறுப்பு வகிக்கும் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் பதவி பறிபோகும் என்பது குறிப்பிடத்தக்கது,


No comments:
Post a Comment