இவ்வாறு இலங்கை வந்திருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் கொழும்பில் உள்ள அமெரிக்க நிலையத்தில் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசியபோதே இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு:
கடந்த இரண்டு நாட்களாக நான் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் பல சந்திப்புகளை மேற்கொண்டேன். கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரைச் சந்தித்துப் பேசினேன்.
2009ஆம் ஆண்டு மே மாதத்தில் நான் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றதை விடவும் இந்நாடு மிகவும் மாறுபட்டுள்ளது. இடம்பெயர்ந்தவர்களில் அநேகர் மெனிக்பாமில் இருந்து வெளியேறியுள்ளனர். ஏனையோர் மிதிவெடி அகற்றல் பூர்த்தியடைந்தவுடன் அங்கிருந்து புறப்படுவர்.
வடக்கில் முக்கியமான உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. 8 ஆயிரத்திற்கும் அதிகமான முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கும், உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், மிதிவெடிகளை அகற்றுவது தொடர்பிலும் கணிசமான பணிகள் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்காவின் உதவிக்குட்பட்டவர்கள்வடக்கு மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கும் வழமை நிலைமைக்குக் கொண்டுவருவதற்கும் துணைபுரியும் வகையில் அமெரிக்கா அதன் உதவித்திட்டங்களை முன்னுரிமைப்படுத்தியுள்ளது. வடக்கு, கிழக்கில் 20ஆயிரம் தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதற்காக தனியார் துறையினருடன் இணைந்து 202 கோடி இலங்கை ரூபாவை நாம் முதலீடு செய்கின்றோம்.
இடம்பெயர்ந்தவர்களும் ஏனையோரும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச்செல்வதற்கு வசதியாக மிதிவெடிகள் அகற்றும் பணிகளுக்குத் தொடர்ச்சியாக நாம் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம். வடக்கில் இடைத்தங்கல் வீடுகளைஅமைப்பதற்காக கடந்தவருடத்தில் 15.4 கோடி இலங்கை ரூபாவை நாம் வழங்கியுள்ளோம்.
இருந்தபோதிலும் சமாதானம், ஜனநாயகம் மற்றும் சுபீட்சத்துடன் கூடிய இலங்கையை உறுதிசெய்துகொள்வதற்கும் யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்துவதற்கும் இன்னமும் பெருமளவு பணிகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளன.
அதிகாரப்பகிர்வு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பான முக்கியமான பேச்சுகளை மீளவும் ஆரம்பிக்க ஆர்வத்துடன் அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இருப்பதையிட்டு அறிந்து நான் மிகுந்து மகிழ்ச்சியடைகின்றேன்.
நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது கவனம் செலுத்தும் என நாம் நம்புகின்றோம்.
மனித உரிமைகள் தொடர்பில் நான் கரிசனை கொண்டுள்ளேன். நல்லிணக்க செயற்பாடுகளிலும், வடக்கில் மீளத் திரும்பிச் செல்கின்ற மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதிலும், மனித உரிமைகள் விடயத்திலும் முன்னேற்றம் காணப்படவேண்டியது மிகவும் முக்கியமானதொரு பாகமாக விளங்குகின்றது.
யுத்தத்திற்குப் பின்னரான நிலைமையை ஆராய்ந்து அதற்கேற்ப அரசியல் தீர்வை முன்வைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இன்னும் 10வருடங்களில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு 60வீத சாத்தியம் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது யுத்தம் இடம்பெற்ற எல்லா நாடுகளிலும் உள்ள நிலைமையாகும்.
அந்த வகையில் அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்காக அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுகள் 13ஆம் திருத்தச்சட்டத்திற்கு அப்பால் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்கும் சாத்தியத்தைக் கொண்டுள்ளன.
அரசுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் நான் மேற்கொண்ட சந்திப்பின்போது இதை என்னால் உணர முடிந்தது. நல்லதோர் அரசியல் தீர்வு முன்வைக்கப்படுவதையே நாம் விரும்புகிறோம்.
அத்தோடு அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதிகாரப்பகிர்வு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் மீண்டும் பேச்சுகளைத் தொடங்கவுள்ளன என்று இருதரப்புகளும் என்னிடம் கூறின. இதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஜெனிவா மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அந்த அறிக்கை இப்போது அங்கு ஆராயப்படுகின்றது. இந்த ஆராய்வு இலங்கைக்குச் சாதகமாகவே அமையும் என்று நாம் நம்புகிறோம்.
இதேவேளை, தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்னும் பூர்த்தியாக்கப்படாததால் அது தொடர்பில் எமக்கு எதுவித கருத்தையும் கூறமுடியாது.ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் இலங்கை தொடர்பாகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பதில் சொல்லும் என்று நாம் நம்புகிறோம் என்றார் பிளேக்.


No comments:
Post a Comment