
கிளிநொச்சி நகர் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கண்ணன் ஆலயப்பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவம் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இம்முகாமைக் கைவிட்டு இராணுவம் வெளியேறியுள்ள போதும் பொதுமக்களின் காணிகள் வீடுகளை உத்தியோக பூர்வமான முறையில் கையளிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதுடன் காணி உரிமையாளர்கள் காணிக்குரிய உறுதி அல்லது காணி அனுமதிப்பத்திரத்தை சமர்ப்பித்து தமது காணியை உறுதிப்படுத்தி அதன்பின் தமது அனுமதியுடன் காணிகளைப் பொறுப்பேற்குமாறு இராணுவ சிவில் அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஏற்கனவே பிரசித்திபெற்ற கண்ணன் ஆலயத்திலும் இச் சுற்றாடலிலுள்ள கட்டடத் திணைக்களம், உள்ளூராட்சி திணைக்களம் கிளிநொச்சி மரண விசாரணை அதிகாரி அலுவலக வளாகம், தனியார் வீடுகள் முதலானவற்றில் தங்கியிருந்த இராணுவத்தினர் கிளிநொச்சி அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் எடுத்த நடவடிக்கையையடுத்து அவ் இடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதேவேளை கிளிநொச்சி நகர் கிராம அலுவலர் பிரிவில் பரவிப்பாஞ்சானிலும் தற்போது யுத்தத்திற்குப் பின்னர் வருடாந்த மகோற்சவம் இடம்பெற்று வரும் கிளிநொச்சி அருள்மிகு கந்தசாமி ஆலயவளாக மடாலயப் பகுதியிலும் அதனை அண்டிய கடைகள் வீடுகளிலும் இராணுவத் தரப்பு நிலை கொண்டுள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


No comments:
Post a Comment