மு.க.ஸ்டாலின் பேசுகையில்:
ஜனநாயகம் என்பது மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களால் வழிநடத்தப்படுவதுதான் என்று இந்திய அரசியல் சட்டம் சொல்கிறது. ஆனால் ஜெயலலிதாவுக்காக, ஜெயலலிதாவால் நடத்தப்படுகின்ற ஜெயலலிதா அரசாகத்தான் இந்த ஆட்சி உள்ளது.
சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்ட விஷயத்தில் ஜெயலலிதா சரியாக நடந்துகொள்ளவில்லை என்று உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 2002ல் இப்போது உள்ள தலைமைச் செயலகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடம். இந்த இடத்தில் புல் பூண்டுகளை புடுங்குவதற்குக் கூட, மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டியுள்ளது. எனவே, புதிய தலைமைச் செயலகத்தை சென்னையில் இருந்து மகாபலிபுரம் செல்லும் சாலையில் அமைக்க வேண்டும் என்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். பின்னர் அந்த இடத்தை விட்டுவிட்டு ராணிமேரி கல்லூரியில் அமைக்க வேண்டும் என்று சொன்னார்.
மக்கள் எதிர்ப்பு கிளம்பியவுடன் அந்த இடத்தையும் விட்டுவிட்டு, கோட்டூர்புரத்தில் இப்போது அறிஞர் அண்ணா நூல் ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் தலைமைச் செயலகத்தை கட்ட வேண்டும் என்று சொன்னார். அதையெல்லாம் அவர் செய்யவில்லை.
ஜெயலலதா கொண்டு வந்த தீர்மானத்தை கலைஞர் அரசு பொறுப்பேற்றவுடன் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டி முடித்தோம். இப்போது அந்த கட்டிடம் சரியில்லை என்கிறார். நாங்கள் நீதிமன்றத்திற்கு போன பிறகு, அந்த கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுவோம் என்கிறார். உண்மையைச் சொல்லப்போனால் ஜெயலலிதா தீர்மானத்தை கலைஞர் அரசுதான் நடைமுறைப்படுத்தியது. அதை ஜெயலலிதா ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். சமச்சீர் கல்வியில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததைப்போல் தலைமைச் செயலக வழக்கிலும் ஒரு பெரிய போராட்டத்தை நடத்தி கடைசியில் நீதிமன்றத்திடம் கொட்டு வாங்குவார்.
திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் கைது செய்யப்பட்டபோது, ஒரு மாணவனின் எதிர்காலத்தை வீணடித்து விட்டார் என்று சொன்ன ஜெயலடிலதா, சமச்சீர் கல்வியை தடை செய்து பல லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை வீணடித்துவிட்டார்.
சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகத்தை துவங்கிய போது, இந்த இயக்கம் பதவிக்கு வரவேண்டும். ஆட்சியைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்படவில்லை. மக்களுக்காக பணியாற்றுவதற்காகத்தான் தொடங்குகிறேன் என்று அண்ணா அவர்கள் சொன்னார். அதைத்தான் கலைஞர் அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
நாளையும் அதுபோலத்தான் நடக்கும். எங்களுக்கு பதவி முக்கியம் அல்ல. தமிழ் நாட்டு மகக்ளின் நலன் தான் முக்கியம். நாங்கள் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டு மக்களுக்கு பாடுபடுவோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.


No comments:
Post a Comment