
20 ஆண்டு கால தொடர்ச்சியான நீண்ட நெடிய போராட்டத்திற்குக் கிடைத்துள்ள முதல் கட்ட வெற்றி இது என்று 3 தமிழர் உயிர் காப்பு இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
மூவருக்கான தூக்குத் தண்டனையை 8 வார காலத்திற்கு நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. தமிழகம் முழுவதும் உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கும், மனித உரிமை அமைப்புகளுக்கும் இது பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
இந்த இடைக்கால உத்தரவு குறித்து பழ.நெடுமாறன் கூறுகையில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வரும் நீண்ட நெடிய போராட்டத்தில் கிடைத்த முதல் கட்ட வெற்றி இது.
சட்டமன்றத்திலும் கூட இன்றைக்கு மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மக்களுக்குக் கிடைத்த வெற்றி. இதை மேலும் மேலும் நிரூபிக்கும் வகையில் தொடர்ந்து மக்களை கட்டியெழுப்ப வேண்டும். நாம் தொடர்ந்து போராட வேண்டும்.
மூவரும் விடுதலையாகும் வரை நமது போராட்டம் ஓயாது, ஓயாது, ஓயாது என்றார்.


No comments:
Post a Comment