நாகை மாவட்டம், மயிலாடுதுறைக்கு (02.09.2011) வருகை தந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கோடான கோடி மக்களின் பேராதரவுடன், தமிழக சட்டமன்றத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
உச்சநீதி மன்றத்தால் 9 ந் தேதி நிறைவேற்றப்பட வேண்டிய தூக்கு தண்டனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் 8 வாரம் தடைவிதித்துள்ளது. இலங்கையில் நமது தொப்புள்கொடி உறவுகள், சகோதரிகள், தாய்மார்கள் ஆகியோரை ஈவு, இரக்கமின்றி கொடுமைப்படுத்தி கொலை செய்த காட்சிகளை வெளிநாட்டு சேனல்கள் மூலம் ஒளிப்பரப்பப்பட்டது. நானும் அதனை ஆயிரக்கணக்கான சி.டி.களை தந்துள்ளேன். இந்த கொடுமைகளுக்கெல்லாம் இந்தியாதான் உதவி செய்தது என்பது வேதனைக்குரியது.
ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தூக்கிலிடப்பட வேண்டும் என்ற தீர்ப்பு வந்தபோது இதயத்தில் ரத்தம் கசிந்து வழிந்தது. 3 தமிழர்களின் உயிரை காக்க தமிழக முதல் அமைச்சர் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் கொண்டு வந்ததை அரசியலுக்கு அப்பாற்பட்டு அவருக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன். தமிழக சட்டமன்றத்திற்கும், சட்டசபை உறுப்பினர்களுக்கும் நன்றி கடன்பட்டுள்ளதை அரசியல் தாண்டி பேசுகிறேன். உச்சநீதிமன்ற உத்தரவை எப்படி ஐகோர்ட்டு தடை செய்ய முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
ஏற்கனவே இதற்கு முன் உதாரணங்கள் உள்ளன. 13 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்தில் 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 1999 ம் ஆண்டு மே மாதம் 19 ந் தேதி 23 பேருக்கு தூக்குத் தண்டனை ரத்து செய்தது. 3 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு மேல் தூக்கு தண்டனை நிலுவையில் இருந்தால் தூக்கு தண்டனை ரத்து செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது. முதல் அமைச்சர் தகுந்த முறையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இதனை சில சக்திகள் எதிர்க்கின்றன. அதை முறியடிப்பது எங்கள் கடமை. இவ்வாறு வைகோ பேசினார்.


No comments:
Post a Comment