ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக் கைதிகளாக உள்ள பேரறிவாளன் சாந்தன் முருகன் ஆகியோரின் கருணை மனுவை இந்திய குடியரசுத் தலைவர் நிராகரித்ததனை அடுத்து எதிர்வரும் 9ம் திகதி தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றுமாறு உள்துறை அமைச்சிலிருந்து பணிப்புரை வந்ததனால் உலகம் பூராகவும் உள்ள தமிழ் மக்கள் சோகத்தில் ஆழ்ந்ததுடன் தூக்குத் தண்டனைக்கெதிராக போராட்டங்களிலும் ஈடுபட்டார்கள்.
குறிப்பாக தமிழ்நாடு மாநில மக்கள் இந்த மூவரையும் தூக்கிலிடக் கூடாதென வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களை நடாத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் உச்சக்கட்டமாக செங்கொடி என்ற இளம்பெண் தீக்குளித்து இந்த மூவரையும் காப்பாற்றுவதற்காக தன்னுயிரைத் தியாகம் செய்துள்ளார்.
இந்த நிலையில் உலகத் தமிழ்மக்களின் சோக நிலையையும் அவர்களின் நலனையும் கருத்தில்கொண்டு தமிழ்நாடு முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் செயல்பட்டு இந்த மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு கோரி சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து சாவின் விளிம்பில் இருந்த மூவரையும் காப்பாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதற்காக முதல்வர் அவர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.
மேலும் உயிர் தியாகம் செய்த செங்கொடிக்கு அகவணக்கத்தினையும் அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.


No comments:
Post a Comment