தனிமை சிறையில் அடைக்கப்பட்டிருப்பது மரண தண்டனையை விட கொடுமையானது என்று பேரறிவாளன் தெரிவித்துள்ளதாக, அவரை நேரில் சந்தித்து பேசிய வக்கீல் ராஜீவ்காந்தி தெரிவித்தார்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வருகிற 9 ந் தேதி அவர்களுக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதைத் தொடர்ந்து வேலூர் மத்திய சிறைக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜெயிலில் உள்ள மற்ற கைதிகளை பார்க்க வருபவர்களில், அவர்களின் உறவினர்களை மட்டுமே பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கின்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
தூக்கு தண்டனை கைதிகள் மூவரும் தனித்தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 3 பேரின் உடல்நிலையை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று சிறை டாக்டர்கள் குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர்.
இந்த நிலையில் நேற்று சென்னையை சேர்ந்த ராஜீவ்காந்தி உள்பட 3 வக்கீல்கள் வேலூர் ஜெயிலில் உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை சந்தித்து பேசினார்கள். பின்னர் வக்கீல் ராஜீவ்காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:
3 பேரின் தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்வதற்காக ஜெயிலில் உள்ள 3 பேரிடமும் தனித்தனியாக பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது. 10க்கு 10 அளவுள்ள தனிமை சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தண்டனை மரண தண்டனையை விட கொடுமையானது என்று பேரறிவாளன் தெரிவித்தார்.
24 மணி நேரமும் அவர்களுடைய ஒவ்வொரு அசைவையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனால் அவர்களின் தனிப்பட்ட உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. இதுகுறித்து சிறைத்துறை தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.
ஜெயில் அதிகாரிகள் தவிர, உள்ளூர் போலீசார், மாநில மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் வந்து பார்த்து செல்கின்றனர். இதனால் அவர்கள் கடும் மனஉளைச்சலில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:
Post a Comment