
தமிழக முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக செந்தமிழ்செல்வி(32) கைது செய்யப்பட்டார்.
திருவல்லிக்கேணி கஸ்தூர்பாய் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டு அறைக்கு வியாழக்கிழமை மாலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
தொலைபேசியில் பேசிய நபர் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையிலும், தமிழக முதல்வர் வீட்டிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டாராம்.
இதைக் கேட்ட 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் பெருநகர காவல்துறையிடம் புகார் செய்தனர். அதையடுத்து போயஸ்கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் வீடு, 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை வெடிகுண்டு தடுப்புப் பிரிவு பொலிசார் தீவிர சோதனை செய்தனர். ஆனால் அங்கு வெடிப்பொருள்கள் எதுவும் சிக்கவில்லை.
இது குறித்து திருவல்லிக்கேணி பொலிசார் வழக்குப்பதிவு செய்து தொலைபேசியில் பேசிய மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த தொலைபேசி அழைப்பில் பேசியவர் சென்னை மறைமலைநகரைச் சேர்ந்த செந்தமிழ்செல்வி என்பது பொலிசாருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பொலிசார் செந்தமிழ்செல்வியை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
அவரிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், தன்னை விட்டு பிரிந்த கணவரை பழிவாங்குவதற்காக அவர் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம்கார்டு மூலம் பேசியதாகவும், இதனால் காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என்ற எண்ணத்தில் தான் இவ்வாறு செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்தாராம்.


No comments:
Post a Comment