
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை இரத்துசெய்யக் கோரி தமிழகத்தில் இன்று (28.08.2011)
ஞாயிற்றுக்கிழமை மாலை தீக்குளித்துத் தன் உயிரை ஆகுதியாக்கிய காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த செங்கொடி (வயது 27) அவர்களுக்கு ஈகவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
செங்கொடி, காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஆவார்.

இவர் ஈகி முத்துக்குமாரின் விவரணப்படத்தை இயக்கிய மகேந்திரன் அவர்களின் உடன்பிறந்த சகோதரி என்பது குறிப்பிடத் தக்கது. மூவரைக் காப்பாற்றக் கோரி சென்னை கோயம்பேட்டில் உண்ணாவிரதம் இருந்து வரும் பெண் வக்கீல்களின் போராட்டத்தில் குறித்த பெண் நேற்று சனிக்கிழமை கலந்துவிட்டுச் சென்றுள்ளார்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரைக் காப்பாற்ற தமிழக அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதிவைத்துவிட்டே காஞ்சிபுரம் வட்டாட்சி அலுவலகத்துக்கு முன்பாக செங்கொடி தன் உயிரை ஈகம் செய்துள்ளார்.
21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா இந்த விடயத்தில் தலையிட்டு தூக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று மாலை இவர், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார். இவரின் ஈகத்தை நினைவுகூரும் ஈகவணக்க நிகழ்வு வரும் (31.08.2011) புதன்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு இந்திய தூதரகத்தின் முன்பாக நடைபெறவுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் மரணதண்டனையை இரத்துச்செய்யக் கோரும் கண்டன நிகழ்வில் இடம் பெறவுள்ளது.
இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.
Embassy of Indian France, 15, Rue Alfred Dehodencq, 75016 Paris
Métro: Lamuette (ligne 9)
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு
தொடர்புகளுக்கு: 01 43 58 11 42


No comments:
Post a Comment