
சந்தேகத்துக்கிடமானவர்களின் நடமாட்டம் நேற்று இரவு கட்டுக்கடங்காமல் அதிகரித்தமையால் பெரும் அல்லோலகல்லோலப்பட்டது குடாநாடு. மக்கள் நித்திரையின்றிப் பீதியில் உறைந்தனர்.யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நேற்று இரவு சந்தேகத்துக்கிடமானவர்களின் நடமாட்டங்கள் அதிகமாகக் காணப்பட்டமையால் மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் விடியும் வரை நித்திரை இன்றி விழித்திருந்தனர் என எமது பிரதேச செய்தியாளர்கள் உறுதிப்படுத்தினார்கள்.
சில இடங்களில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியவர்களைத் துரத்திச் சென்ற இளைஞர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே முறுகல் நிலையும் ஏற்பட்டது. இந்த இடங்களில் இளைஞர்களை அச்சுறுத்துவதற்காகப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்ததாகவும் சில இடங்களில் சந்தேகத்துக்கிடமான நபர்களைக் கலைத்துப் பிடிக்க முற்பட்ட இளைஞர் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன.
கடந்த சில நாள்களாக ஆங்காங்கே இடம்பெற்று வந்த சந்தேகத்துக்கிடமானவர்களின் நடமாட்டம் நேற்று இரவு கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. நகரப் பகுதி முதல் கிராமப்புறங்கள் வரை பரவலாகப் பல இடங்களிலும் இவர்களின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டதாகவும் இதனால் அந்தப் பகுதிகளில் பதற்றமான நிலை ஏற்பட்டதாகவும் செய்தியாளர்களும் மக்களும் தெரிவித்தனர்.பதற்றமான நிலை ஏற்பட்டதை அடுத்து அந்தப் பகுதிகளில் இருந்த மக்கள் கூட்டம் கூட்டமாக ஒவ்வொரு வீடுகளில் ஐந்து, ஆறு குடும்பங்களாகச் சேர்ந்து இருந்தனர். பெண்கள் வீடுகளுக்குள் இவ்வாறு இருக்க ஆண்கள் வீடுகளுக்கு வெளியே காவல் கடமையில் ஈடுபட்டிருந்தனர். இதனால் பலருக்கு நேற்றைய இரவு நித்திரை இன்றிக் கழிந்தது.சில இடங்களில் வீடுகளுக்கு இந்த சந்தேகத்துக் கிடமானவர்கள் நுழைய முற்பட்டமையால் வீடுகளில் இருந்தவர்கள் பெரும் கூக்குரல் எழுப்பினார்கள். இவர்கள் கூக்குரல் எழுப்புவதை கேட்டு அயலில் இருந்தவர்களும் கூக்குரலிட்டனர். இதனால் அந்தப் பகுதிகளில் பெரும் அல்லோலகல்லோல நிலை ஏற்பட்டது.
சில பகுதிகளில் இந்தச் சந்தேகத்துக்கிடமானவர்களைப் பிடிப்பதற்கு இளைஞர்கள் மேற்கொண்ட முயற்சிகள் படையினரால் தடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.பதற்ற நிலை ஏற்படும் இடங்களுக்கு உடனடியாகச் சென்ற படையினர் வீதிகளில் குவிந்திருந்த மக்களை உடன் வீடுகளுக்குள் செல்லுமாறு கடும் தொனியில் தெரிவித்தனர். அத்துடன் இராணுவத்தினர் சிவில் உடையிலும் சீருடையிலும் கையில் கொட்டன்களைத் தாங்கியவாறு வலம் வந்தனர். இரு இடங்களில் மக்களால் வளைத்துப் பிடிக்கப்பட்ட சந்தேகத்துக்கிடமான நபர்கள் மூவர் அந்தப் பகுதிக்கு வந்த படையினரால் ஏற்றிச் செல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன.
நேற்று நள்ளிரவு கடந்த பின்னரும் இந்த சந்தேகத்துக்கிடமானவர்களின் நடமாட்டம் பல இடங்களிலும் தொடர்ந்ததாக பொதுமக்கள் பலர் உதயனுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.கடந்த சில தினங்களை விட நிலைமை இன்று இரவு மிக மோசமாகவுள்ளது. எமது வீட்டுக்கு முன்னால் உள்ள வீடொன்றுக்குள் நுழைய முயன்றவர்களை அந்தப் பகுதியில் நின்ற இளைஞர்கள் துரத்தினார்கள். எனினும் சிறிது நேரத்தில் அங்கு அந்த சீருடையினர் அவர்களை எச்சரித்து வீடுகளுக்குச் செல்லுமாறு கூறினார்கள் என்றார் வலிகாமம் பகுதியில் உள்ள பாடசாலை அதிபர் ஒருவர்.
குடாநாட்டின் பல பகுதிகளிலும் நேற்று இரவு இடம்பெற்ற சம்பவங்களின் விவரம் வருமாறு:
சுழிபுரத்தில் ஒருவர் பிடிபட்டார்
சுழிபுரம் வறுத் தோலைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபர் ஒருவரைக் கலைத்துப் பிடித்து மக்கள் அவரை வட்டுக்கோட்டைப் பொலிஸ்நிலையத்தில் நேற்று ஒப்படைத்துள்ளனர். அந்த நபர் சித்த சுவாதீனம் அற்றவர் எனப் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்ட போதும் வலிமேற்கு பிரதேசசபையின் தலைவர் அந்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதை அடுத்து பொலிஸார் குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலை செய்யவுள்ளதாகத் தெரிவித்தனர்.சுழிபுரம் வறுத்தோலை பகுதியில் நேற்று மாலை சந்தேகத்துக்கிடமான முறையில் நபர் ஒருவர் நடமாடியுள்ளார். மக்கள் அவரை அணுகி விசாரிக்க முற்பட்டபோது எந்தவித பதிலையும் அவர் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து அந்த நபரை மக்கள் பின் தொடர்ந்தனர். இதன் போது ஒரு திருமண வீட்டுக்குள் சென்ற அவர் சாப்பாடு தருமாறு சிங்களத்தில் கேட்டிருக்கின்றார்.
பின்னர் அந்த நபரை மக்கள் விசாரிக்க முற்பட்டபோது அவர் தான் அணிந்திருந்த சாரத்தைக் கழற்றி எறிந்துவிட்டுச் சென்றுள்ளார். அவர் மிக இறுக்கமான காற்சட்டை அணிந்திருந்தாக பொதுமக்கள் தெரிவித்தனர்.இறுதியில் அந்த நபரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் அவரை வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் கையளித்துள்ளனர். பொலிஸார் குறித்த நபர் சித்த சுவாதீனமற்றவர் எனத் தெரிவித்தனர். பொலிஸ் நிலையத்துக்கு நேரடியாகச் சென்ற வலிமேற்கு பிரதேச சபையின் தலைவர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.மக்களால் பிடித்து ஒப்படைக்கப்படுகின்றவர்கள் அனைவரும் சித்தசுவாதீனம் அற்றவர்களா? இந்த நபரை மக்கள்தான் பிடித்து உங்களிடம் ஒப்படைத்துள்ளனர். நீங்கள் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துங்கள் என்று அவர் பிடிவாதமாக நின்றதால் அவரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகப் பொலிஸார் கூறியதாக வலிமேற்குப் பிரதேச சபைத் தலைவர் உதயனுக்குத் தெரிவித்தார்.
குருநகரில் பதற்றம்
நேற்று இரவு குருநகர் அண்ணாசாலையடிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக ஓருவரின் நடமாட்டத்தை அவதானித்த அந்தப்பகுதி மக்கள் அவர்களை சுற்றி வளைத்து மடக்கிப் பிடிக்க முற்பட்டனர். இந்த நேரத்தில் தடிகள், பொல்லுகளுடன் அங்கு கும்பல் கும்பலாக வந்து இறங்கிய இராணுவத்தினர் அங்கு நின்றவர்களை அடித்து வீடுகளுக்குள் விரட்டினார்கள். இதனால் அந்தப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.இந்தச் சம்பவத்தை அடுத்து அந்தப்பகுதி மயான அமைதியாக நிலவியதுடன் வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள் என்பனவும் இழுத்து மூடப்பட்டன. அனைத்து வீதிகளிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
சுன்னாகத்தில் முறுகல்
சுன்னாகம் கலைவாணி சனசமூக நிலையத்துக்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் சந்தேகத்துக்கிடமான முறையில் மூவர் நுழைய முயன்றுள்ளனர். இதனை அவதானித்த அந்தப்பகுதி இளைஞர்கள் அந்த நபர்களை விரட்டிச் சென்று சுற்றிவளைத்துப் பிடிக்க முயன்றனர். எனினும் அந்தப்பகுதிக்கு உடனடியாக இராணுவத்தினர் வந்தனர். இதனால் அங்கு முறுகல் நிலை ஏற்பட்டது. அங்குநின்ற இளைஞர்கள் சிலரைப் படையினர் தாக்கியதுடன் வானத்தை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களையும் தீர்த்தனர். இதையடுத்து அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. படையினர் குவிக்கப்பட்டனர்.
மட்டுவிலில் வாகனம்
மட்டுவில் பகுதியில் நேற்று இரவு 9.15 மணியளவில் வாகனம் ஒன்றில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித்திரிந்த நபர்களை அப்பகுதி இளைஞர்கள் கலைத்துச் சென்று மடக்கிப்பிடிக்க முயன்றனர். அங்குள்ள தரவைப் பாதை ஒன்றின் ஊடாக இந்த வாகனம் தப்பிச் செல்ல முற்பட்டது. இளைஞர்கள் அதனைச் சுற்றி வளைத்தனர். உடனடியாக அங்குவந்த படையினர் அதனைத் தாம் பார்த்துக் கொள்வதாகவும் இளைஞர்களைக் கலைந்து செல்லுமாறும் எச்சரித்து அனுப்பினார்கள்.
கைதடியில்
கைதடி தச்சன்தோப்புப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று இரவு 8.15 மணியளவில் நுழைய முயன்ற நபர் ஒருவர் வீட்டுக் காரக் கூக்குரல் எழுப்பியதை அடுத்துத் தப்பி ஓடிவிட்டார். இவரை அங்கு கூடியவர்கள் கலைத்துப் பிடிக்க முயன்றவேளை மின்சாரம் தடைப்பட்டது. இதனால் சந்தேகத்துக்கிடமானவர்கள் தப்பிச் செல்ல மின்சார சபையும் உதவுகிறதா என அங்கு நின்றவர்கள் கடிந்து கொண்டனர்.
நல்லூரில்
நல்லூர் மடத்தடிப் பகுதியிலும் நேற்று இரவு சந்தேகத்துக்கிடமான ஒருவரின் நடமாட்டத்தால் பதற்ற நிலை ஏற்பட்டதாக அங்கிருந்து மக்கள் தொலைபேசி மூலும் தெரிவித்தனர்.இதேபோன்று வட்டுக்கோட்டை, பண்டத்தரிப்பு, இளவாலை, மானிப்பாய், நீர்வேலி, புத்தூர், கொக்குவில், சாவகச்சேரி, கொழும்புத்துறை, சண்டிலிப்பாய், கட்டுடை, அராலி, உரும்பிராய், திருநெல்வேலி, சங்கானை, கோப்பாய், ஆனைக்கோட்டை, இணுவில் பகுதிகளிலும் நேற்று இரவு சந்தேகத்துக்கிடமானவர்களின் நடமாட்டத்தால் அப்பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டதாகவும் தாம் பெரும் அச்சத்துடன் உள்ளதாகவும், வீதிகளில் படையினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் மக்கள் உதயனுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தனர். இந்தத் தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை.
இதேவேளை
யாழ்ப்பாணம், கோண்டாவில் பிரதேசத்தில் வைத்து நேற்றுமுன்தினம் மாலை பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட நபர் கோப்பாய் பொலிஸாரால் நேற்று யாழ். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
குறித்த சந்தேக நபரின் பெயர் ரி.டி.தனஞ்சே (வயது 20). இவரை விசாரணை செய்த நீதிமன்ற நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்ததுடன் மனநோயாளியாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் உத்தரவிட்டார்.இது தொடர்பான மீள் விசாரணைகள் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.


No comments:
Post a Comment