
மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகிய மூவரது தீர்ப்பினை உலகத் தமிழர் அனைவரும் ஏக்கத்துடனும் எதிர்ப்புடனும்; நிறுத்தக் கோரியுள்ளனர். ஓட்டமொத்தத் தமிழர்களது இக்கோரிக்கைக்கு இந்திய மத்திய அரசு இதுவரை செவிசாய்க்காதது வேதனையைத் தருகிறது.
ஏற்கெனவே 21 வருடங்கள் சிறையிலே ஆயுட்தண்டனை அனுபவிக்கும் இவர்கள் கடந்த ஏழு தினங்களாக தினமும் உளவியல் ரீதியாக மரணதண்டனையை அனுபவித்தும் வருகிறார்கள். இவற்றைக் கவனத்திற் கொண்டு இம் மூவரது தீர்ப்பினையும் மறுபரிசீலனை செய்து மரணதண்டனையை இரத்துச் செய்து அவர்களை விடுதலை செய்யுமாறு இந்நேரத்தில் நாம் இந்திய அரசினை உலகத் தமிழ் இனம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
இதேவேளை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தமிழின உணர்வாளர் ஈகைப்பேரொளி செங்கொடி அவர்கள் இம்மூவரது உயிர் காக்கத் தன்னுயிரை ஈந்தளித்து தீக்கிரையாக்கியமை உலகத் தமிழர்களை தாங்கொணாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. உணர்வுகளுக்கு நாங்கள் சிரம்தாழ்த்தி வணங்கும் அதேவேளை நாம் இழந்தது போதும், உறவுகளே இவ்வாறான உயிர்க்கொடைகள் இனியும் வேண்டாம்.
செங்கொடி எனும் சரித்திரம் தமிழின விடுதலை வரலாற்றின் வழியில் ஓர் அழியாத் தடமாகப் பதிவாகி இருக்கும் என்பது திண்ணம்.
இந் நீங்கா நினைவுகளோடு செங்கொடியின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
உலகத் தமிழர் நாம் கொண்ட எம் இலட்சியத்தை வென்றெடுக்க ஒற்றுமையாய் உழைத்திடுவோம்.
சர்வதேச ஆதரவிற்காய் ஓரணியில் ஒன்றுபட்டு தொடர்ந்து குரல் கொடுப்போம்..
சுவிஸ் ஈழத்தமிழரவை


No comments:
Post a Comment