
பயங்கரவாதம், போதைப் பொருட் கடத்தல் போன்ற அனைத்துலக குற்றங்கள் உள்ளடங்கலாக நடைமுறையிலுள்ள பல்வேறு குற்றவியல் விடயங்கள் தொடர்பாக பரஸ்பரம் உதவிகளை வழங்குவதன் பொருட்டு ரஷ்யா மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளும் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இது தொடர்பான மூன்றாம் சுற்றுப் பேச்சுக்கள் இந்த வாரம் கொழும்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்ட இரு நாட்டுப் பிரதிநிதிகளும் அனைத்துலக குற்றவியல் செயற்பாடுகள் குறிப்பாக பயங்கரவாதம் மற்றும் போதைப் பொருட் கடத்தல் தொடர்பாக பரஸ்பரம் இருநாடுகளும் உதவிகளை வழங்குவதென உடன்பட்டுள்ளனர்.
மூன்று நாட்கள் இடம்பெற்ற பேச்சுக்களின் போது இக்குற்றவியலைத் தடுப்பதற்கான தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பாக இரு நாடுகளும் விரிவாகக் கலந்துரையாடியுள்ளன.
"இக்குற்றங்களுடன் சம்பந்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளை அவர்களது சொந்த நாட்டு அரசாங்கத்திடம் கையளிப்பதன் மூலம் இவர்களின் புனர்வாழ்வுகளை மேலும் முன்னேற்றமுடியும் என இதில் முக்கியமாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது" என சிறிலங்கா வெளியுறவுத்துறை அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரஷ்ய அரசாங்கத்தின் நீதித்துறை அமைச்சின் பிரதி இயக்குனர் Yuri Kirichenko தலைமையிலான குழுவினரும் சிறிலங்காவின் பிரதம வழக்கறிஞர் திருமதி. எவா வனசுந்தர தலைமையிலான குழுவினருமே இவ்வாரம் கொழும்பில் சந்தித்து உடன்பாடு கண்டனர்.


No comments:
Post a Comment