இதில் ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றலினை முன்னாள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், திரு. ஜெயானந்தமூர்த்தி அவர்கள், ஏற்றி வைக்க அதனைத் தொடர்ந்து கொடியேற்றல் நிகழ்வு இடம்பெற்றன. ஐரோப்பியக்கொடியினை நெதர்லாந்து பொறுப்பாளரும், பிரெஞ்சுக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் திரு. யோசேப் அவர்களும், தமிழீழ தேசியக்கொடியினை விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு. சுதர்சன் அவர்களும் ஏற்றிவைத்தனர்.
ஈகைச்சுடரினை மாவீரர் கடற்கரும்புலி கப்ரன் தமிழ்மாறனின் சகோதரர் ஏற்றி வைத்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து தேசத்திற்கான மரியாதை நிகழ்வுகள் நிறைவு கண்டதையடுத்து ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனக் கொடியினை அதன் தலைவர் திரு. சங்கராஜா அவர்கள் ஏற்றி வைத்ததோடு உதைபந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமாகின.
இப் போட்டிகளில் சுவிஸ், கொலேன்ட், பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து 12 கழகங்கள் பங்கு பற்றியிருந்தன.
மைதானங்களில் நடைபெற்ற போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றன.
தண்டனை உதைகள் மூலம் கழகங்கள் வெற்றியீட்டி தெரிவுக்கு வந்திருந்தன.
15 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டியில் 1ம் இடத்தை தமிழர் விளையாட்டுக்கழகம் 93 பிரான்சு அணியினரும், 2ம் இடத்தை தமிழர் விளையாட்டுக்கழகம் பிரான்சு அணியும், 3ம் இடத்தை சார்ல்ஸ் அன்ரனி விளையாட்டுக்கழகம் சுவிஸ் அணியினரும் பெற்றுக்கொண்டனர். பெரியவர்களுக்கான போட்டியில் 1ம் இடத்தை தமிழர் விளையாட்டுக்கழகம் 93 பிரான்சும், 2ம் இடத்தை உதயசூரியன் விளையாட்டுக்கழகம் பிரான்சும், 3ம் இடத்தை தமிழர் விளையாட்டுக்கழகம் நெதர்லாந்தும் பெற்றுக்கொண்டன.
மாவீரர் லெப் கேணல் விக்ரர் ( ஒஸ்கா) அவர்களின் நினைவாக 8 ஆவது ஆண்டாக நடாத்தும் அனைத்துலக ரீதியிலான உதைபந்தாட்டப்போட்டியில் பங்கு கொள்ள வேண்டும் சிறப்பிக்க வேண்டும் தாய் மண்ணுக்கும், அதற்காக உயிர்நீத்தவர்களின் நினைவாக முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு நிகழ்விற்கும் மதிப்பளிப்போம் என்ற உணர்வுடன் வெற்றி எடுக்க வேண்டும் என்பதற்கு அப்பால் கலந்து கொள்வதே பெருமை என்ற ரீதியில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்து கலந்துகொண்ட வீரர்கள் அதன் பொறுப்பாளர்கள் தமது நன்றியை தெரிவித்திருந்தனர்.
சிறப்பாகக் கலந்துகொண்டு மாவீரர் லெப். கேணல் விக்ரர் அவர்களின் நினைவுச்சுற்றுக்கிண்ணத்தை வழங்கிய திரு.ஜெயானந்தமூர்த்தி அவர்கள் தனது உரையில், காலையில் இருந்து மாலை வரை இந்த உதைபந்தாட்டப் போட்டியை கண்குளிரக்கண்டு களித்ததாகவும், ஒவ்வொரு வீரர்களுடைய திறமைகளை பாராட்டுவதாகவும், இந்த திறமைகள் வீரர்களை வழிபடுத்துனர்களால் சரியான பாதையில் வழிநடத்திச்சென்று தமிழ் இனத்திற்கு சர்வதேச ரீதியில் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் உரையாற்றினார்.
முதல் மூன்று கழகங்களுக்கான பணப்பரிசில்களும் நன்கொடையாளர்களால் வழங்கப்பட்டது.
வெற்றிபெற்ற வீரர்களுக்கும், கழகங்களுக்கும் ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர், மற்றும் உறுப்பினர்கள் பரிசில்களை வழங்கி மதிப்பளித்தனர்.
இறுதி நிகழ்வாக சம்மேளனக் கொடியிறக்கலுடன், தேசியக்கொடிகள் மற்றும் ஐரோப்பிய கொடியும் இறக்கி வைக்கப்பட்டன.
நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.





No comments:
Post a Comment