தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின்போது அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய தரப்பினரும் ஆயுதம் வைத்திருக்க முடியாது என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்று வழங்கிய செவ்வியிலேயே பாதுகாப்புச் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸார் தவிர்ந்த வேறு எந்த தரப்பினருக்கும் ஆயுதமேந்த அனுமதி வழங்கப்படவில்லை. விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின்போது அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய தரப்பினரும் ஆயுதம் வைத்திருக்க முடியாது என்று கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுற்ற பின்னர் ஆயுதமேந்திய குழுக்களிடமிருந்த ஆயுதங்களை மீட்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
அரசியல் பின்னணி மற்றும் ஏனைய காரணிகளை கருத்திற் கொள்ளாது சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொஸிஸாருக்கும், இராணுவத்தினருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஒரு சில தனிநபர்கள் ஆயுதங்களை தம்மிடம் தக்கவைத்துக்கொண்டுள்ளன.
இவர்களை நாம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம் என்று கூறியுள்ளார். விடுதலைப்புலிகளிடமிருந்து பிரிந்து போரின்போது அரசாங்கத்துடன் செயற்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலி உறுப்பினர்களிடமும் சட்டவிரோத ஆயுத பாவனை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். போர் முடிவுற்றுள்ளதால் தற்போது யாரும் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தம்மிடம் உள்ள ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறினால் அவர்கள் கைது செய்யப்படுவர்.
வடக்கில் இடம்பெற்ற உள்ளுராட்சிசபைத் தேர்தல்களின் போது இராணுவத்தினர் எவ்வித தலையீடுகளையும் மேற்கொள்ளவில்லை. சில வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் இவ்வாறான போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினர் தலையீடு செய்திருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பாரியளவில் வெற்றியீட்டியிருக்க முடியாது. தமிழீழ விடுதலைப்புலிகள் இயங்கிய காலத்தில் வடக்கு கிழக்கு தேர்தல்களின் போது எவ்வாறான தாக்கம் காணப்பட்டது என்பதனையும் புலிகளின் தலையீடுகளையும் நினைத்துப் பார்க்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
சனல் 4 ஊடகத்தின் ஆவணப்படத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக தீர்மானிப்பது முட்டாள்தனமானது. யுத்தத்தின் பின்னரான அபிவிருத்திப் பணிகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் இவ்வாறான போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளின் தலையீட்டினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடலாம் என கோத்தபாய தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்களை விடுத்து புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். இதனையே ஜனாதிபதியும் வலியுறுத்தியுள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் அந்த செவ்வியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்


No comments:
Post a Comment